மேற்கு வங்கத்தில், இன்று இரவு நபன்னாவில் பகுதியில் உள்ள தலைமை செயலகத்திலேயே தங்கியிருந்து யாஸ் புயலினால் ஏற்படும் தாக்கங்கள் மற்றும் மீட்பு பணிகளை கண்காணிக்க போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
யாஸ் புயல், நாளை அதிகாலை 5.30 மணியளவில், அதிகபட்சமாக மணிக்கு 185 கி.மீ என்ற வேகத்தில் ஒடிசா கடற்கரையில், கரையை கடக்கும் என கூறப்பட்டிருக்கிறது. அதிக வேகத்தில் புயல் கரையை கடப்பதால், தேசிய பேரிடர் படையுடன் சேர்த்து, மீட்பு பணிக்காக 54,000 அதிகாரிகளும், நிவாரணப் பணி மேற்கொள்ளும் அதிகாரிகள், இரண்டு லட்சம் காவல் துறையினர் மற்றும் ஊர்காவல் படையினரும் பணியில் இருப்பர் என மம்தா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
அந்த அறிவிப்பை தொட்ர்ந்து, “அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்களுடனும் யாஸ் புயல் குறித்து நான் பேசியிருக்கிறேன். இன்று இரவு நபான்னாவில் தலைமைச் செயலகத்தில் தங்கியிருந்து அனைத்தையும் இங்கிருந்தபடியே கண்காணிப்பேன்” எனக்கூறியுள்ளார் அவர்.
அதிகாலை கரையைக் கடக்கும்போது, புயல் மிகத்தீவிரமாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. புயல் கரையும் கடக்கும்போது, மணிக்கு 155 கி.மீ. என்ற வேகம் தொடங்கி 165 கி.மீ. வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. ஒடிசாவின் ஜகத்சிங்க்பூர், கேட்ராபா, பாத்ராக், பலாசோர் மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் கிழக்கு மிட்னாபோர் மாவட்டங்களில் மணிக்கு 185 கி.மீ. வேகத்தில் கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
இதில் மேற்கு வங்கத்தில், வட மற்றும் தெற்கு 24 பார்கன்ஸ் மாவட்டங்களில் மணிக்கு 90 முதல் 100 கி.மீ வேகம் தொடங்கி 120 கி.மீ. வேகம் வரை புயல் வீசும் எனக் கூறப்பட்டுள்ளது. அப்படி கடக்கும்போது, கொல்கத்தா – ஹவுரா – ஹூக்லி போன்ற மாவட்டங்களில் அதிகபட்ச மழை பதிவாகலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட ஆம்பன் புயலைவிடவும் இந்த யாஸ் புயல் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கின்றார்.
புயல் எச்சரிக்கையாக, இதுவரை 9 லட்ச மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டிருப்பதாக மம்தா அறிவித்திருக்கிறார். கடந்த வருட புயலின்போது, 10 லட்சம் பேர் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.