மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கரையைக் கடந்தது டவ் தே புயல்

மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கரையைக் கடந்தது டவ் தே புயல்
மும்பை, குஜராத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி கரையைக் கடந்தது டவ் தே புயல்

குஜராத்தின் போர்பந்தர் அருகே ‘டவ் தே’ புயல் நேற்றிரவு கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. 

தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான டவ் தே புயல், அதிக தீவிர புயலாக உருவெடுத்து நேற்று மாலை கரையை கடக்கத் தொடங்கியது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருமாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகள் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நேற்று இரவு 9 மணி அளவில் குஜராத் மாநிலத்தில் போர்பந்தர்- மாகுவா இடையே கரையை நெருங்கியது. முன்னதாக மும்பை கடல் பகுதியில் 145 கி.மீ. தொலைவில் புயல் நகர்ந்து சென்றது. புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு சுமார் 165 முதல் 185 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. பலத்த மழையும் பெய்தது. புயல் கரையைக் கடக்க 2 மணி நேரத்துக்கு மேல் ஆகியது. புயல் காரணமாக மும்பை விமான நிலையம் மூடப்பட்டது. இதேபோல மும்பை அருகே உள்ள இதர கடலோர மாவட்டங்களிலும் சுழன்று அடித்த காற்றுடன், கனமழையும் கொட்டி தீர்த்ததால் பெரும் சேதம் ஏற்பட்டது.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் கரையை கடக்கும்போது அங்கு கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்று, பெருமழை காரணமாக பல இடங்கள் உருக்குலைந்தன. ஏராளமான மின் கம்பங்களும், மரங்களும் சாய்ந்தன. குஜராத்தில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்டங்களில் இருந்து சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.  தற்போது டவ்தே புயலானது வலுவிழந்து, டையூ அருகே மையம் கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com