ஒடிசாவை நெருங்கிய ஃபோனி புயல்: 11 லட்சம் பேர் வெளியேற்றம்!

ஒடிசாவை நெருங்கிய ஃபோனி புயல்: 11 லட்சம் பேர் வெளியேற்றம்!
ஒடிசாவை நெருங்கிய ஃபோனி புயல்: 11 லட்சம் பேர் வெளியேற்றம்!

இந்தியப் பெருங்கடலில் கடந்த 10 நாட்களுக்கு முன் ஏற்பட்ட காற்றழுத்தம், வங்கக் கடலைத் தொட்டதும் வலுப்பெற்று ஃபோனி புயலானது. முதலில் தீவிர புயலாக கரையைக் கடக்கக்கூடும் என கணிக்கப்பட்ட ஃபோனி, அதிதீவிரம், மிக அதிக தீவிரம் என பயங்கர புயலாக வலுப்பெற்றது. இன்று பிற்பகல் 3 மணிக்கு ஒடிசாவின் பூரி பகுதியில் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் நகரும் ஃபோனி, காலை 9.30 மணிக்கே கரையைக் கடக்கத் தொடங்கும் என பின்னிரவில் அறிவிக்கப்பட்டது.

ஒடிசாவின் கரையோர மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் கிராமங்களைச் சேர்ந்த 11 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். 4 ஆயிரத்துக்கு மேற்பட்ட மையங்கள், 880 புயல் பாதுகாப்பு அரங்கங்களில் தங்கியுள்ள மக்களுக்கு உணவு தயாரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட உணவுப் பொட்டலங்கள், உடனடி உணவுகள், ரொட்டிகள், பிஸ்கட்டுகளை வானில் இருந்து விநியோகிக்க வீரர்களுடன் ஹெலிகாப்டர்கள் தயாராக உள்ளன.

புயல் நெருங்கியதையடுத்து நேற்று காலை முதலே கடலோர மாவட்டங்களில் இருந்து அப்புறப்படுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் நடந்தது. மக்கள் தாங்களாகவே கால்நடையாகவும், வாகனங்களிலும் வசிப்பிடத்தை காலி செய்து சென்றனர். ஒடிசா கரையோர மாவட்டங்களில் காற்று வீசுகிறது, சாரல் மழை பெய்து வருகிறது.

மீட்பு மற்றும் நிவாரணப் பணி, மின்சாரம், பால், குடிநீர், காவல் ஆகிய துறைகளைத் தவிர்த்து ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில், பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் இன்று மூடப்பட்டுள்ளன. இன்று காலை பூரி நகரம் வழியாக கரையைக் கடக்கும் ஃபோனி புயல், கரையோரப் பகுதி வழியாக மேற்கு வங்கத்தையும் தாக்கும் எனத் தெரிகிறது. அதன் தாக்கம் வடகிழக்கு மாநிலங்கள், ஆந்திரா மற்றும் வடதமிழகத்தில் கூட இருக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. புயல் கரையைக் கடக்கும்போது ஒடிசாவில் கடல் அலைகள் ஒன்றரை மீட்டர் உயரத்துக்கு எழும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஃபோனி புயலில் பாதிப்புகளை சமாளிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசித்த நிலையில், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், வெள்ளிக்கிழமை முழுவதும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com