7 மாநிலங்கள், 9,000 கிமீ.. போலீஸை அலைக்கழித்த தலைமறைவு குற்றவாளி, தோழிக்கு போன் செய்த நிலையில் கைது!

வெளியுலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சல்மானுல் ஃபரிஸ் என்ற நபர், தனது தோழிக்கு போன் செய்ததன் மூலம் போலீசில் சிக்கியிருக்கிறார்.
Salmanul Faris
Salmanul Faris Onmanorama

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தொட்டில்பாலம் கவிலும்பாறையைச் சேர்ந்தவர் சல்மானுல் ஃபரிஸ் (வயது 26). இவர் மீது கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் சைபர் மோசடி தொடர்பான வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் சல்மானுல் ஃபரிஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். எனவே அவரை போலீசார் தேடி வந்தனர். மேலும் நீதிமன்ற விசாரணைக்கும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் அவருக்கு எதிராக பல நீதிமன்றங்கள் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளன.

இதையடுத்து சல்மானுல் ஃபரிஸை கேரள போலீசார் வலைவீசித் தேடி வந்தனர். இதில் கடந்த ஜூலை 9ஆம் தேதி கொல்கத்தாவில் பதுங்கியிருந்த அவரை கேரள போலீசார் கைது செய்து ரயில் மூலமாக கேரளாவுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது வழியில் ரயில் ஆந்திரா அருகே செல்கையில் சல்மானுல் ஃபரிஸ் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடினார்.

Police
Police

இதையடுத்து வயநாடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதம் சிங் உத்தரவின் பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வினோத் பிள்ளை தலைமையின் கீழ், சல்மானுல் ஃபரிஸை கைது செய்ய சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது. இந்த எஸ்ஐடி பல்வேறு குழுக்களாகப் பிரிந்து கர்நாடாகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சென்று சல்மானுல் ஃபரிஸை பல நாட்களாக சல்லடைப் போட்டு தேடி வந்தது. 7 மாநிலங்களில் சுமார் 9,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து சல்மானுல் ஃபரிஸை தேடிவந்த நிலையில் அவர் எங்கே இருக்கிறார் என்பது தெரியாமல் போலீசார் திணறிவந்தனர்.

இதனிடையே சல்மானுல் ஃபரிஸ், தான் புதிதாக வாங்கிய செல்போன் எண்ணிலிருந்து, அவரது தோழியான பெங்காலி பெண் ஒருவருக்கு போன் செய்திருக்கிறார். இதையடுத்து அந்த செல்போன் எண் சிக்னலை வைத்து சல்மானுல் ஃபரிஸ் இருக்குமிடத்தை ஆராய்ந்த போலீசார் அவர் சிக்கிம் மாநிலம் காங்டாக்கில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் சல்மானுல் ஃபரிஸை கைது செய்து பலத்த பாதுகாப்புடன் கேரளாவுக்கு அழைத்து வந்தனர்.

வெளியுலகத் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த சல்மானுல் ஃபரிஸ் தனது தோழிக்கு போன் செய்ததன் மூலம் போலீசில் சிக்கியிருக்கிறார். அவரை போலீசார் கல்பெட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அடுத்தகட்டமாக விசாரணை மூலம் பல சைபர் குற்றங்களில் நடவடிக்கை எடுக்கப்படுமென நம்பப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com