சீன கருவிகளால் பாதுகாப்பிற்கு அச்சம்? மத்திய அரசு தீவிரம்
இந்தியாவில் சைபர் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாக அச்சம் எழுந்துள்ளதால் மத்திய அரசு தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த 7ம் தேதி டெல்லியில் ஏர்டெல் நிறுவனத்தின் ரேடியோ அலைவரிசையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக குளறுபடி ஏற்பட்டது. 9ம் தேதி ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ தொலைத்தொடர்பு சேவையை பெறுவதற்காக அளிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் தகவல்கள் இணையதளத்தில் கசிந்ததாகக் கூறப்பட்டது. அதேபோல், தொழில்நுட்ப கோளாறால் தேசிய பங்குச்சந்தையும் திடீரென நேற்று முடங்கியது. இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளதால், இதுகுறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருகிறது.
கந்தாண்டு 32 லட்சம் டெபிட் கார்டுகளின் ரகசிய குறிடீட்டெண் கசிந்ததாகவும், அதன் மூலம் பெரும்பாலான பணப்பரிவர்த்தனைகள் சீனாவில் இருந்து மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதனால், இந்த சைபர் தாக்குதலும் அண்டை நாட்டிலிருந்து நடந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் பெரும்பாலும் சீன உபகரணங்களையே பயன்படுத்தி வருவதாகவும், அதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.