பெட்ரோல், டீசல் விலை குறைவதற்காக மாநில அரசுகள் அவற்றின் மீதான வாட் வரியை குறைக்க வேண்டுமென மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது குறித்து ஏற்கனவே ஒரு முறை கோரிக்கை விடுத்திருந்ததாகவும், இதை ஏற்று சில மாநிலங்களே வாட் வரியை குறைத்ததாகவும் அமைச்சர் பிரதான் கூறினார். மக்கள் நலன் கருதி மற்ற மாநிலங்களும் வாட் வரியை இனிமேலாவது குறைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மத்திய அரசு தங்கள் பங்குக்கு கடந்த அக்டோபரில் பெட்ரோல், டீசலுக்கான உற்பத்தி வரியை 2 ரூபாய் குறைத்திருந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.
மாநில அரசுகள் அனைத்தும் ஒப்புக்கொண்டால் மட்டுமே பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு வரும் நாட்களில் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.