ஆந்திரப் பிரதேசத்தில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனாவைக் கட்டுப்படுத்த ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமலில் இருக்கும் ஊரடங்கு மாதத்தின் இறுதிவரை நீட்டிக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தற்போது அமலில் இருக்கும் பகுதிநேர ஊரடங்கை வருகிற மே 31 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில், கடந்த 3 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை பகுதிநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் படி காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை இயங்க அனுமதிக்கப்பட்டன. மதியம் 12 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊரடங்கு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், அம்மாநில முதல்வர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 20,000 தாண்டி உள்ள நிலையில் நேற்று அதிகபட்சமாக 24,171 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 21,101 பேர் குணமாகி வீடு திரும்பிய நிலையில், 101 பேர் உயிரிழந்துள்ளனர்.