தேசிய குடிமக்கள் பதிவேடு: விடுபட்டுப்போன அசாம் மாநில எம்எல்ஏக்கள் பெயர்..!
இன்று வெளியாகி உள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியலில் எம்எல்ஏக்கள் உள்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அசாம் மாநில மக்களின் குடியுரிமையை உறுதி செய்யும் தேசிய குடிமக்கள் பதிவேடு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதிவேட்டில் மூன்று கோடியே 11 லட்சத்து 21 ஆயிரத்து நான்கு பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 19 லட்சத்து ஆறாயிரத்து 687 பேரின் பெயர்கள் விடுவிக்கப்பட்டதாக பதிவேட்டின் திட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் பிரதிக் ஹஜீலா தெரிவித்துள்ளார்.
அண்டை நாடுகளில் இருந்து குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு வெளியிடப்பட்டுள்ளது. பலரது பெயர்கள் விடுபட்டிருப்பதால், அசாம் மாநிலத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்கெனவே 167 கம்பெனி மத்திய ஆயுதப்படைக் காவலர்கள் இருக்கும் நிலையில் மேலும் கூடுதலாக 51 கம்பெனி படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் எம்எல்ஏக்கள் உள்பட பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. மத சிறுபான்மை அரசியல் தலைவர்கள் சிலரின் பெயர்களும் கூட இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை.
அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்எல்ஏவான ஆனந்த குமார் மற்றும் அவரது மகள் பெயரும் இறுதிப் பட்டியலில் இடம்பெறவில்லை. தல்கான் காங்கிரஸ் எம்.எல்.ஏ இலியாஸ் அலியின் மகள் பெயரும் இறுதி பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஜனநாயக முன்னணி கட்சியை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவான ரஹ்மான் பெயரும் இறுதிப்பட்டியலில் இடம்பெறவில்லை. இதனிடையே தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டோர் வெளிநாட்டவர் தீர்ப்பாய அலுவலகங்களில் புகார் தெரிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.