அன்று கப்பலில் 'செஃப்'... இன்று வீதியோர பிரியாணி கடை...- பேரிடரை வென்ற உத்வேக இளைஞர்!
சொகுசு கப்பலில் 'செஃப்' ஆக இருந்த இளைஞர் ஒருவர் கோரோனா பேரிடரால் வேலை இழந்ததால் துவண்டுவிடாமல், உத்வேகத்துடன் வீதியோரத்தில் பிரியாணி கடையைத் தொடங்கி முன்னுதாரணமாக விளங்குகிறார்.
கொரோனா நோய் தொற்று பலரது வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு இருக்கிறது. பல நாடுகளில் இளைஞர்கள் தங்களது வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர். கொரோனா பேரிடரால் பல நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பே இதுபோன்ற வேலை இழப்புகளுக்கு காரணமாக அமைந்துள்ளது. இளைஞர்கள் பலரும் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என தெரியாத சூழ்நிலையில் அவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார் ஓர் இளைஞர்.
அவரது பெயர் அக்சய் பார்கர். 7 நட்சத்திர ஹோட்டல்களிலும், சொகுசு கப்பல்களிலும் செஃப் (தலைமை சமையலர்) ஆக இருந்த அக்சய் பார்க்கருக்கு கொரோனா காலம் சோதனையாக அமைந்தது. அவரும் கொரோனா தொற்றின் காரணமாக வேலை இழந்தார். ஆனால் அந்தச் சோதனை காலத்தை அவர் மன உறுதியோடு எதிர்கொண்டு, இப்போது மும்பை மாநகரின் தாதர் பகுதியின் சாலையில் சிறிய பிரியாணி கடையை திறந்துள்ளார். அக்சய் பார்க்கரின் இந்தக் கதையை Beingmalwani என்ற ஃபேஸ்புக் பக்கம் பகிர்ந்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அக்சய் பார்க்கருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள அந்த ஃபேஸ்புக் அவருக்கு உதவுமாறு தங்களது பக்கத்தை பின் தொடர்பவர்களை கேட்டுக்கொண்டுள்ளது. அக்சய் பார்க்கர் வேலையிழப்பினால் துவுண்டுவிடாமல், பிரியாணி கடையை திறந்தது இளைஞர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக இருக்கிறார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.