“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
பொதுமக்கள் போல் ஊடுருவி காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிஆர்பிஎப் தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, பயங்கரவாதிகள் நேற்று தற்கொலை படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நேற்று முதலே தாக்குதல் நடந்தது எப்படி? இதற்கு காரணம் என்ன? வெடி மருந்து பொருட்களுடன் கூடிய வாகனம் சிஆர்பிஎப் வாகனம் அருகே வந்தது எப்படி? என பல்வேறு கேள்விகள் எழும்பிய வண்ணம் உள்ளன. இதைத்தொடர்ந்து தேசிய பாதுகாப்பு செயலாளரான அஜித் தோவல் இன்று உளவுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்திய பால் மலீக், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் எப்படி தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து சிஆர்பிஎப் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “கடும் பனிப்பொழிவு காரணமாக 2 ஆயிரத்து 500 சிஆர்பிஎப் வீரர்களை கொண்ட வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. மற்றொரு புறம் பொதுமக்கள் செல்லக்கூடிய வாகனங்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் வாகனங்கள் போன்ற போர்வையில் சென்ற வாகனங்கள்தான் தீவிரவாத தாக்குதலை நடத்தியது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர “இதுவரை 36 பேர் உடல் அடையாளம் காணப்பட்டிருக்கிறது. நான்கு உடல்கள் மிகுந்த சேதமடைந்து கருகி இருப்பதால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை” எனவும் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்திய வாகனத்தை ஓட்டிவந்த பயங்கரவாதியை தவிர வேறு யாரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உளவுத்துறை அதிகாரிகள், தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.