சமூக வலைதளங்களை கலக்கும் சிஆர்பிஎஃப் வீரர்களின் நெகிழ்ச்சி புகைப்படம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொழுகையில் ஈடுபடும் இஸ்லாமிய வீரர் ஒருவருக்கு சக எல்லைப் பாதுகாப்புப் படை (சிஆர்பிஎஃப்) வீரர் காவலுக்கு நிற்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாதுகாப்புப் படை வீரர்கள் மீதான தாக்குதல்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதி புர்ஹான்வானி கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை மீதான தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, ஸ்ரீநகர் அருகே மசூதி அருகே கடந்த ஜூன் 23ல் தனியாக காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் அதிகாரி முகமது அயூப் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வு தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், பாதுகாப்புப் படையினரிடையே உள்ள ஒற்றுமை குறித்து ஸ்ரீநகர் சிஆர்பிஎஃப் படை பிரிவு ட்விட்டரில் சில புகைப்படங்களை வெளியிட்டது. அதில், தொழுகையில் ஈடுபடும் வீரர் ஒருவருக்கு சகவீரர் பாதுகாப்பு அளிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ’அமைதிக்காக ஆயுதம் ஏந்திய சகோதரர்கள்’ என்ற பெயரில் அந்த புகைப்படத்தை சிஆர்பிஎஃப் படைப்பிரிவு பகிர்ந்திருந்தது. மத நல்லிணக்கத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு என்றும், மதத்தின் பெயரால் நாட்டைத் துண்டாட நினைப்பவர்களுக்கு சிறந்த பதிலடி என்றும் அந்த புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

