அதிகரிக்கும் கொரோனாவால் எழும் விமர்சனங்கள்.. குற்றச்சாட்டுகளை மறுக்கும் பினராயி விஜயன்
கேரளாவில், தினசரி கொரோனா பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து பதிவாகி வரும் நிலையில், கேரளாவில் இருந்து கன்னியாகுமரி வருபவர்களிடம் தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.
குமரியில் உள்ள 3 எல்லைப் பகுதிகளிலும் சோதனை கேரளாவில் கடந்த புதன்கிழமை தினசரி கொரோனா பாதிப்பு 31 ஆயிரத்து 445 ஆக பதிவாகி இருந்தது. வியாழனன்று 30 ஆயிரத்து 7 ஆக பதிவானது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் அதிகரித்து 32,802 ஆக அதிகரித்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த தினசரி பாதிப்பில், 58 சதவிகிதம் கேரளா என்று மத்திய சுகாதாரத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.
கொரோனா சூழலை கேரளா அரசு சரியாக நிர்வகிக்காததே தொற்று உயர காரணம் என மாநில அரசு மீது விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. இது தேவையற்றது என முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். மார்க்சிஸ்ட் பத்திரிகை ஒன்றில் எழுதியுள்ள பினராயி விஜயன், கொரோனா குறித்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த ஒரு பிரிவினர் முயற்சி செய்து வருவதாகவும் இதுபோன்ற செயல்களால் கொரோனாவிற்கு எதிரான மக்களின் போராட்டம் திசைதிரும்பும் நிலை ஏற்படும் என்றும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இதற்கிடையே தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து கன்னியாகுமரிக்கு வரும் அனைத்து வாகனங்களையும் காவல்துறையினர் சோதனை செய்கின்றனர். தடுப்பூசி சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை நெகட்டிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே மாவட்டத்திற்குள் அனுமதிக்கின்றனர். உரிய சான்றிதழ் இல்லாமல் வருபவர்களை காவல்துறையினர் திருப்பி அனுப்புகின்றனர். மாவட்டத்தில் உள்ள மூன்று எல்லைப் பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் உள்ள எல்லைகளிலும் காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.