சுதர்சன் ரெட்டி குறித்த அமித் ஷாவின் விமர்சனம்.. முன்னாள் நீதிபதிகள் குழு கண்டனம் | VP Election
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக INDIA கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்ததற்கு முன்னாள் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியை இங்கு அறியலாம்.
பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, அதுவும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், திடீரென ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த மகாராஷ்டிரா ஆளுநராக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது.
இது, தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. அதேநேரத்தில், INDIA கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், சுதர்சன் ரெட்டி குறித்த, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு முன்னாள் நீதிபதிகள் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமைச்சரின் பேச்சு எதிர்பாராதது என்றும் அவர் குறைந்தபட்சம் பெயரை குறிப்பிடுவதையாவது தவிர்த்திருக்கலாம் என்றும் 18 நீதிபதிகள் குழு கூறியுள்ளது. நக்சல்களுக்கும் அந்த சித்தாந்தத்திற்கும் ஆதரவாக தீர்ப்பில் ஒரு வார்த்தைகூட இல்லை என அக்குழு விளக்கியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்றை வெறுப்புக்குரிய வகையில் தவறான புரிதலுடன் உயர் மட்டத்திலுள்ள அரசியல் தலைவர் ஒருவர் விமர்சிப்பது நீதிபதிகள் இடையே அச்ச உணர்வை உண்டாக்கும் என்றும் அக்குழு தெரிவித்துள்ளது.
இது நீதித்துறையின் சுதந்திரத்தையே ஆட்டம் காண வைத்துவிடும் என்றும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். முன்னாள் நீதிபதிகள் மதன் லோக்குர், செலமேஸ்வர், குரியன் ஜோசப், சந்துரு உள்ளிட்டோர் கொண்ட குழு இதைத் தெரிவித்துள்ளது.
சுதர்சன் ரெட்டி உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது சல்வா ஜுடும் அமைப்பு தொடர்பாக அளித்த தீர்ப்பை அமித் ஷா விமர்சித்திருந்தார். சுதர்சன் ரெட்டி நக்சல் ஆதரவாளர் என்ற ரீதியிலும் அமித் ஷா கூறியிருந்தார்.