2017ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் இதுவரை பல ஆயிரம் குற்ற வழக்குகள் தலைநகர் டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ஆண்டுக்கு ஆண்டு குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், இந்தாண்டின் முதல் பாதியில் வரலாறு காணாத விதமாக 21சதவீத குற்ற சம்பவங்கள் உயர்ந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இரு சக்கர வாகனத்திருட்டும், வழிப்பறி மற்றும் வீடு புகுந்து திருடுவது போன்ற குற்ற சம்பவங்கள் தான் டெல்லியில் பிரதான இடத்தை பிடிப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் கொடூர மற்றும் கொடி குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வரும் நிலையில், பிற குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றங்கள், கொலை, கடத்தல், கலவரம் உள்ளிட்டவை குறைந்துள்ளது மகிழ்ச்சியானதாக இருந்தாலும், பணத்தை மையப்படுத்தும் குற்றங்கள் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும் காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.