`தொடரும் மின்வெட்டுக்கு காரணமென்ன?’- கேள்விகேட்கும் தோனியின் மனைவி சாக்‌ஷி

`தொடரும் மின்வெட்டுக்கு காரணமென்ன?’- கேள்விகேட்கும் தோனியின் மனைவி சாக்‌ஷி
`தொடரும் மின்வெட்டுக்கு காரணமென்ன?’-  கேள்விகேட்கும் தோனியின் மனைவி சாக்‌ஷி

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின் வெட்டு நிலவுவது குறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்நாடு உட்பட நாடெங்கும் பல மாநிலங்களில் கடந்த சில தினங்களாக மின்வெட்டு இருந்து வருகின்றது. இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும் நிலக்கரியை கொண்டு செய்யப்படும் மின் உற்பத்திதான் மிகவும் அதிகம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே நிலக்கரி விலை அதிகரித்து வந்த நிலையில் தற்போது உக்ரைன் போரை தொடர்ந்து அது இன்னும் வேகமாக உயரத் தொடங்கியது.

நிலக்கரி பற்றாக்குறை பிரச்னை தீவிரமடையும் என்றும் இதன் தொடர்ச்சியாக நாடெங்கும் மின்வெட்டு அதிகரிக்கும் என்றும் மின்சார பொறியாளர்கள் கூட்டமைப்பு சில நாட்களுக்கு முன் எச்சரித்திருந்தது. குறிப்பாக ஆந்திரா, உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத், பஞ்சாப், ஜார்க்கண்ட், ஹரியானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் தீவிரமடையும் என அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

நிலக்கரி பிரச்னையை அரசு சரியாக கையாளவில்லை எனவும் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளதாகவும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி விமர்சித்திருந்தார். `30 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பில் உள்ளது. எனவே அச்சம் தேவையில்லை’ என மத்திய அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. நிலக்கரி உயர்வு மட்டுமல்லாமல் அதை மின் உற்பத்தி நிலையங்களுக்கு கொண்டு செல்ல ரயில் பெட்டிகள் பற்றாக்குறையும் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கோடை வெயில் தீவிரமடைந்து வரும் நிலையில் மின் வெட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியான சூழலில் 40 டிகிரி செல்சியஸ்சிற்கும் மேல் வெயில் வாட்டி வதைக்கும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்வெட்டாலும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். தனது பதிவில் அவர், `மின்சாரத்தை சேமிக்க எங்களது கடமையை தொடர்ந்து செய்து வருகிறோம். இருந்தபோதிலும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஏன் மின் வெட்டு நிலவுகிறது? பல ஆண்டுகளாக வரி செலுத்துபவராக இந்த கேள்வியை அரசிடம் கேட்கிறேன்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையிலுள்ள மத்திய மாநில அரசுகள் இதற்கு என்ன பதில் சொல்லவுள்ளது, என்ன செய்து சூழலை சரிசெய்ய உள்லதென்பதெல்லாம் யோசிக்கப்பட விஷயமாகவே உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com