கொரோனா சிகிச்சைக்கு கடன் - வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி!
கொரோனா 2 ஆவது அலையால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற வசதியாக கடனுதவி வழங்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
கொரோனா 2 ஆவது அலையால் பல மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தனி நபர்கள், சிறு தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு முன்னுரிமை தந்து கடனுதவி வழங்க வங்கிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவமனைகள், ஆக்சிஜன் வினியோகஸ்தர்கள், தடுப்பூசி இறக்குமதியாளர்களுக்கு 50 ஆயிரம் கோடி ரூபாயை முன்னுரிமை கடனாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.
இந்த வசதிகள் வரும் ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என்றும் சக்திகாந்த தாஸ் கூறினார். இவை தவிர தனி நபர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கடனை சிக்கலின்றி திரும்பச் செலுத்த வசதியாக விதிமுறைகளை மாற்றியமைக்க வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதாக சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். சிறு தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கடனுதவி வழங்க சிறு வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். மேலும், மாநில அரசுகள் முன் கூட்டிய கடன் பெறும் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார்.