மாணவ தலைவர் டூ பொதுச்செயலாளர்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் புது அத்தியாயம்.. யார் இந்த எம்.ஏ பேபி?
- யுவபுருஷ்
அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாராக எம்.ஏ. பேபி, தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடைபெற்று வந்த நிலையில், புதிய பொதுச்செயலாளருக்கான அறிவிப்பு வந்துள்ளது. இந்த நேரத்தில், பொதுச்செயலாளராகி இருக்கும் எம்.ஏ. பேபியின் பின்னணி குறித்து விரிவாக பார்க்கலாம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நடந்து வருகிறது. கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை என்ற தலைப்பில் கடந்த 3ம் தேதி நடந்த மாநில உரிமைக்கான பாதுகாப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா உயர்கல்வித் துறை அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். இந்த நிலையில், மாநாட்டின் கடைசி நாளான நேற்று கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள், பொலிட் பீரோ உறுப்பினர்கள் மற்றும் புதிய பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் கேரள முன்னாள் கல்வி அமைச்சர் எம்.ஏ. பேபி கட்சியின் அடுத்த தேசிய பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டார். மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நிறைவை ஒட்டி, பேபியை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த தலைவராக இருக்கும் எம்.ஏ பேபிக்கு இப்போது 70 வயதாகிறது. கட்சியில் மூத்த, முன்னணி தலைவராக உருவெடுத்திருக்கும் பேபியின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது என்னவோ, கேரள மாணவர் கூட்டமைப்பில் இருந்துதான். கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பிறந்த இவர், தன்னை ஒரு நாத்திகராக அறிவித்துக்கொண்டவர். குறிப்பாக கட்சியின் தலைமைக்குழுவில் ஒரே கிறஸ்தவ முகமாகவும் இருக்கிறார் பேபி.
மாணவர் கூட்டமைப்பில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பேபி, எமர்ஜென்சி காலத்தில் மாணவர்களையும், இளைஞர்களையும் அணி திரட்டிய முக்கிய இளம் தலைவராக உருவெடுத்தார். அதனாலேயே எமர்ஜென்சி காலத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். 1986ல் தனது 32வது வயதிலேயே மாநிலங்களவை உறுப்பினராக மாறிய பேபி, 1999 வாக்கில் கட்சியின் தேசிய அளவிலான உயர்மட்ட குழுவில் நுழைந்திருந்தார்.
எனினும், அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில், மாநில அளவிலான தலைமை, அதாவது பினராயி விஜயன், கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பின்னால் தள்ளப்பட்ட பேபி, 2006ம் ஆண்டு தேர்தல் அரசியலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். முதல்முறை எம்.எல்,ஏ ஆனபோதே மாநிலத்தின் கல்வித்துறை அமைச்சராகவும் மாறினார்.
தொடர்ந்து 2011ம் ஆண்டு மீண்டும் சட்டமன்ற உறுப்பினரானவர், அடுத்தடுத்த ஆண்டில் கட்சியின் தேசிய அளவிலான உயர்மட்ட குழுவில் மீண்டும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினார். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றாலும், கட்சியின் உயர்மட்ட குழுவில் பேபியின் வளர்ச்சி தொடர்ந்தது. கேரளாவில் இருந்து பார்த்தால் டெல்லி அரசியலில் அதிகம் கவனம் செலுத்திய பேபி, கட்சி விவகாரங்களை திறம்பட கையாண்ட முகமாகவும் பார்க்கப்படுகிறார். இ.எம்.எஸ். நம்பூதிரிபாட்டுக்குப் பிறகு கேரளாவில் இருந்து அகில இந்திய பொதுச் செயலாளராக மாறி இருக்கும் எம்.ஏ பேபிக்கு பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர். புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இவருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாணவத் தலைவராக தொடர்ந்து மாநிலத்தின் கல்விக்கொள்கையில் புரட்சிகர தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் காம்ரேடுக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.