RSS உடன் மார்க்சிஸ்ட் கட்சியை ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தி.. CPI(M) சண்முகம் பதிலடி!
கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி 2023-ம் ஆண்டு ஜூலை 18ந்தேதி இயற்கை எய்தினார். அவரது நினைவஞ்சலி நிகழ்ச்சி புதுப்பள்ளியில் நேற்று ( 20.7.2025) நடைபெற்றது. உம்மன்சாண்டியின் நினைவிடத்தில் மலர்த்தூவி அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி, பின்பு நினைவஞ்சலி கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
அதில், ” நான் ஆர்எஸ்எஸ் மற்றும் சிபிஐ(எம்) கட்சிகளை சித்தாந்த ரீதியாக எதிர்த்துப் போராடுகிறேன். ஆனால் என்னுடைய மிகப்பெரிய புகார் என்னவென்றால், அவர்களுக்கு மக்கள் மீது உணர்வு இல்லை. நீங்கள் அரசியலில் இருந்தால், மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும், அவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டும்.
இன்றைய இந்திய அரசியலில் உள்ள உண்மையான சோகம் என்னவென்றால், மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை மிகச் சிலரே உண்மையில் உணர்கிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து இடதுசாரி அரசியல் தலைவர்களிடையே பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா? என்று சரமாறியாக ராகுல் காந்திக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ மதவெறி பி.ஜே.பி - ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. காங்கிரஸ் கட்சி தலைவர் @RahulGandhi அவர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும், ஆர்.எஸ்.எஸ்யும் சித்தாந்த ரீதியாக சம அளவில் எதிர்த்து போராடுகிறேன் என்று பேசியிருப்பது. அவரது முதிர்ச்சியற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் மதசார்பின்மையை பாதுகாக்க முடியுமா?" என்று தெரிவித்துள்ளார்.