ஆன்-லைனில் கோமியம் விற்பனை அமோகம்... ஆர்.எஸ்.எஸும் களமிறங்குகிறது!
பசுவதைக்கு தடை, மாட்டிறைச்சிக்காக மாடுகளை விற்கத்தடை என ஒருபுறம் நாடு முழுவதும் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஆன்-லைனில் கோமியம் வியாபாரம் சக்கைப்போடு போடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அவர்கள் நடத்தி வரும் மாட்டுத்தொழுவத்தில் இருந்து கோமியத்தை பல்வேறு பகுதிக்கு தங்கள் அமைப்பினர் மூலம் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் விரைவில் இந்த அமைப்பின் சார்பாக கோமியம் ஆன்-லைனில் விற்பனை செய்யப்படும் என அந்த அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மதுராவில் உள்ள தீன்தயாள் தாம் பரிசோதனை மையத்தில் இதற்கான பணிகள் நடைபெறுகிறது. அங்கு கோமியம் மூலமாக சோப், பேஸ்கிரீம் ஆகியவை தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முன்பாகவே பல ஈ-ஷாப்பிங் இணையதளங்களில் சுத்தமான கோமியம் கிடைக்கும் என விளம்பரப்படுத்தி வியாபாரம் கனஜோராக நடைபெற்று வருகிறது. அரை லிட்டர் கோமியம் 500 ரூபாய் என்றும், தள்ளுபடி போக 255 ரூபாய் மானிய விலையில் விற்பனை செய்யப்படுவதாக பிரபல ஈ-ஷாப்பிங் இணையதளத்தில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல ஷாப்பிங் இணையதளங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப கோமியத்தின் விலையை நிர்ணயித்து வருகிறது. இது ஒருபுறமிருக்க மாட்டு சாணத்திலிருந்து செய்யப்படும் வரட்டி 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.