'மாட்டு சாணம் பூசப்பட்ட வீட்டை அணுக்கதிர் வீச்சு தாக்காது' - சொல்கிறார் குஜராத் நீதிபதி

'மாட்டு சாணம் பூசப்பட்ட வீட்டை அணுக்கதிர் வீச்சு தாக்காது' - சொல்கிறார் குஜராத் நீதிபதி
'மாட்டு சாணம்  பூசப்பட்ட வீட்டை அணுக்கதிர் வீச்சு தாக்காது' - சொல்கிறார் குஜராத் நீதிபதி

'பசுவின் சாணம் பூசப்பட்ட வீட்டை அணுக்கதிர் வீச்சு தாக்காது' என்று குஜராத் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.

குஜராத் மாநிலம் தாபி மாவட்டத்தில் உள்ள செசன்ஸ் கோர்ட்டில் பசு கடத்தல் தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெற்று வந்தது. அந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 22 வயது இளைஞருக்கு  நீதிபதி சமீர் வியாஸ், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவிற்கு பசுக்களையும், காளைகளையும் கடத்திய அவருக்கு பல்வேறு சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டு நிரூபணமானதாகக் கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நீதிபதி சமீர் வியாஸ் அப்போது வழங்கிய தீர்ப்பின் முழுவிவரம் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில், ''அறிவியல் ரீதியாக வீட்டில் பசு சாணம் பூசியிருந்தால் அங்கு கதிர்வீச்சு பாதிப்பு இருக்காது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. பசுவின் கோமியம் பல தீரா நோய்களை குணப்படுத்தவல்லது. இந்த பூமியின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் நாள் எதுவென்றால், பசுவின் ஒரு சொட்டு ரத்தம் கூட கீழே சிந்தாத நாள்தான். பசு பாதுகாப்பு பற்றி நாம் நிறைய பேசினாலும் கூட அது முழுவீச்சில் நடைமுறைப்படுத்தப்படவில்லை. பசு நம் தாய். அதை வதைப்பது சரியல்ல.

இந்தியாவில் 75 சதவீத பசுக்கள் காணாமல் போய்விட்டது. சட்டவிரோதமாக பசுக்கள் கடத்தப்படுவதும், வெட்டப்படுவதும் வேதனையளிக்கிறது. ஒரு நாகரீக சமூகத்திற்கு இது அவமானம். இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளாகியும் இங்கே பசுவதை குறைந்தபாடில்லை. பசு என்பது மத அடையாளம். பசு சார்ந்த இயற்கை விவசாய முறையை பின்பற்றி விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் நம்மை பல்வேறு நோய்களில் இருந்தும் காப்பாற்றும். பசுக்கள் இன்று அபாயத்தில் இருக்கின்றன'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் பசுவதை செய்வோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் வகையில் கடந்த 2017ஆம் ஆண்டில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com