இந்தியாவில் கொரோனா பேரலை: ஏப்ரலில் நிமிடத்துக்கு ஓர் இந்தியர் உயிரிழப்பு - பாடம்தான் என்ன?
கொரோனா இரண்டாம் அலை உச்சம் கண்ட ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்தத் தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து சற்றே விரிவாக சில தரவுகளைப் பார்ப்போம்.
கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை இந்தியாவில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் நிலைமையை கண்டு உலக நாடுகள் பலவும் தங்களது கவலையை தெரிவித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவாக இன்று இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து அனைவரையும் கலக்கம் அடையச் செய்துள்ளது. உயிரிழப்பும் 3500 கடந்துள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அனைத்து வகைகளிலும் முயன்று வருகிறது.
இதற்கிடையில், ஒரு புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஓர் இந்தியர் கொரோனாவால் இறந்துள்ளனர். அதாவது, கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி இந்தியாவில் 162,959 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றைய தினம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 211,853 ஆக உள்ளது.
இன்னும் சொல்லப்போனால் கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி தான் இரண்டாவது அலையின் உயிரிழப்பு பாதிப்பு உச்சபட்சத்தை தொட ஆரம்பித்தது. அன்றைய தினம் உயிரிழப்பின் எண்ணிக்கை 457 ஆக இருந்த நிலையில், அன்றிலிருந்து தற்பொழுது வரை எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயர தொடங்கி தற்போது 3500-க்கும் அதிகமானோர் ஒரே நாளில் உயிரிழக்கும் அவலம் இருந்து வருகிறது. உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா மரணங்களில் நான்கில் ஒரு மரணம் இந்தியாவில் பதிவாகியுள்ளது என்ற புள்ளி விவரத்தில் இருந்தே நிலைமை எந்த அளவிற்கு மோசமாக இருக்கிறது என்பதை உணர முடியும்.
இதில் கொரோனாவால் உயிர் இறப்பவர்களை விட கொரோனா பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சை கிடைக்காமல் ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கணிசமானதாகும். டெல்லியில் உள்ள கோல்டன் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் 20 பேர், பாத்ரா மருத்துவமனையில் 8 பேர் என பல தனியார் மருத்துவமனையில் புதிய சிகிச்சைகள் இல்லாமல் இறந்தவர்களின் எண்ணிக்கை மட்டும் நூற்றுக்கணக்கில் உள்ளது. உத்தரப் பிரதசேம், குஜராத், மத்தியப் பிரதேசம், மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.
அதேநேரத்தில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு சில தினங்களாக அதிகரித்து வருவதும் மருத்துவர்களையும் அரசுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 18 வயதுக்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, இந்த பாதிப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நிலைமையை மேலும் மோசமாக்கும் வகையில் தடுப்பூசி பற்றாக்குறையும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.
எனவே, அரசுகள் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்துப் பொருட்கள் பற்றாக்குறை, தடுப்பூசி பற்றாக்குறையான இருக்கக்கூடிய அத்தனை விஷயங்களையும் உடனடியாக சரிசெய்து லட்சக்கணக்கான உயிர்களை காக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
- நிரஞ்சன் குமார்