சபரிமலை செல்லும் பக்தர்களா?: கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது கேரளா
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கேரள அரசு மாற்றியமைத்துள்ளது.
சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக வரும் 15ஆம் தேதி நடை திறக்கப்படவுள்ளது. அதற்கு அடுத்த நாள் முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், முன்பதிவு செய்த பக்தர்கள் வருவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்பு 48 மணி நேரத்திற்கு முன்பாக சோதனை எடுத்த சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறியிருந்த நிலையில் அது தற்போது 24 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுடன் துணைக்கு வருவோரும், ஓட்டுநர்களுக்கும் நெகட்டிவ் சான்று வைத்திருப்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அங்கேயே தங்கி சிகிச்சை அளிக்கவும், அவர்களின் விருப்பத்தின் பேரில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.