தனியாக வசிக்கும் முதியவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த போலீசார்: நெகிழ்ச்சி வீடியோ!
தனியாக வசிக்கும் முதியவரின் பிறந்தநாளுக்கு கேக் வெட்டி கொண்டாடிய போலீசாருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. அதன் காரணமாக மக்கள் வீடுகளுக்குள்ளேயே தங்கள் நேரத்தை செலவழித்து வருகிறார்கள். இந்நிலையில் ஹரியானா மாநில போலீசார் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை அரங்கேற்றியுள்ளனர்.
பஞ்ச்குலா போலீசார், ஒரு வீட்டின் வாசல் அருகே நின்று அங்குள்ள முதியவர் ஒருவரை அழைக்கின்றனர். அவருடைய பெயரை போலீசார் கேட்கின்றனர். அவர் தனது பெயர் கரண் புரி எனக் கூறிக்கொண்டே தான் இங்கு தனியாக வசித்து வருவதாக சொல்கிறார். அப்போது திடீரென்று பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியவாறே பிறந்தநாள் கேக் ஒன்றை போலீசார் நீட்டுகின்றனர். இதனை சிறிதும் எதிர்பாராத அந்த கரண் போலீசாரின் அன்பில் நெகிழ்ந்து கண்ணீர் சிந்துகிறார்.
இது குறித்து தெரிவித்துள்ள போலீசார், அந்த முதியவர் தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிள்ளைகள் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில் கரண் குறித்து எங்களுக்கு ட்வீட் செய்த அவரது உறவினர்கள் தனியாக இருக்கும் அவருடைய பிறந்தநாளை கொண்டாட முடியுமா எனக் கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது என தெரிவித்துள்ளனர். இந்த பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.