ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க அனுமதி
ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்ஜாமீன் மறுக்கப்பட்டதை அடுத்து நேற்றிரவு சிபிஐ அதிகாரிகள் ப.சிதம்பரத்தை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, முதல்கட்ட விசாரணையை முடித்து கொண்டு ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது விசாரணைக்கு ப.சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை என சிபிஐ புகார் தெரிவித்தது. வழக்கு குறித்து சிபிஐ தரப்பில் எழுப்பப்பட்ட எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை எனவும் அதனால் ப.சிதம்பரத்தை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும் எனவும் சிபிஐ தரப்பு வாதாடியது.
இதையடுத்து தனது வாதத்தை தொடங்கிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கரராமனுக்கு ஏற்கெனவே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். இருதரப்பு வாதமும் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ப.சிதம்பரத்தை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரிய சிபிஐ மனு மீது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும் ஒரு நாளில் அரைமணி நேரம் குடும்பத்தினரை சந்திக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மீண்டும் சிதம்பரத்தை திங்கட்கிழமை ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு சிதம்பரத்தை அதிகாரிகள் அழைத்து செல்கின்றனர்.