கிறுக்கி எழுதிய டாக்டர்கள்: அபராதம் விதித்தது நீதிமன்றம்!
டாக்டர்கள் எழுத்து புரியாது என்பது பொதுவான ஒன்றுதான். மருந்துச் சீட்டை மணிக்கணக்காகப் பார்த்தாலும் அவர்கள் எழுதியது நமக்குப் புரியாது. ஆனால் மருந்து கடைக்காரர்களுக்கு புரிந்துவிடும். இதை நாம் சகித்துக்கொள்வோம். நீதிமன்றம் சகித்துக்கொள்ளுமா?
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை விசாரித்து வந்தது நீதிபதிகள் அஜய் லம்பா, சஞ்சய் ஹர்கவுலி கொண்ட அமர்வு. வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்காக மருத்துவர்கள் அளித்த குறிப்புகளை நீதிபதிகள் சரிபார்த்தனர். அவர்கள் எழுதி இருந்த எதுவும் சரிவர புரியவில்லை. பலமுறை முயன்றும் அவர்களால் அதை வாசிக்க முடியவில்லை.
இதையடுத்து புரியாமல் கிறுக்கி எழுதி, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து உன்னாவோ, சித்தாப்பூர், கோண்டா பகுதிகளைச் சேர்ந்த மருத்துவர்கள் ஜெய்ஸ்வால், கோயல், ஆசிஷ் சக்சேனா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ‘பணிச்சுமை காரணமாக வேகமாக எழுயதால் இப்படி ஆகிவிட்டது என்றும் இனி இப்படி எழுதமாட்டோம்’ என்றும் தெரிவித்தனர். இதை ஏற்காத நீதிபதிகள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.