ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்புடைய புகாரில் காஷ்மீர் தம்பதி கைது..!
ஆப்கானிஸ்தானில் உள்ள கோரசன் மாகாணத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் பிரிவுடன் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட காஷ்மீரைச் சேர்ந்த தம்பதியினர், தெற்கு டெல்லியின் ஜாமியா நகரைச் சேர்ந்த காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தம்பதி பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த இஸ்லாமிய ஆண்களைத் தூண்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் இவர்கள் டெல்லியில் தற்கொலை தாக்குதலைல நடத்த திட்டமிடுவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவேடுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை கட்டமைப்பதில், ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் இவர்கள் சேர்ந்து திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தத் தம்பதிகளின் பெயர் ஜஹான்ஜீப் சமி என்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது சம்பந்தமான செய்தியை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் உள்ள அவர்களது வீட்டில் இருந்து இன்று காலை இந்தத் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையின்போது அவர்கள் வீட்டில் சில முக்கியமான பொருட்களை வைத்திருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
உளவுத்துறை அமைப்புடன் தொடர்புடைய ஒரு மூத்த அதிகாரி இது குறித்து கூறுகையில், “ஆப்கானிஸ்தானில் உள்ள ஐஎஸ்கேபி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களுடன் இந்தத் தம்பதியினர் தொடர்பு கொண்டுள்ளனர். திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தின்போது முஸ்லிம் இளைஞர்களை வைத்து பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த இந்தத் தம்பதி தூண்டியதாக தெரியவந்துள்ளது.
ஜஹான்ஜீப் சமி ஒரு தனியார் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். இந்த ஜோடி சமூக ஊடகத்தில் ‘இந்திய முஸ்லிம்கள் ஒன்றுபடுங்கள்’ என்ற தனியான தளத்தையும் கொண்டு செயல்பட்டுள்ளனர். இதன் மூலம் CAA மற்றும் NRC க்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்காக இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்” என்றும் அவர் தெவித்தார்.