மருந்து மாத்திரை இல்லை: உடல் எடையை கச்சிதமாக குறைத்த தம்பதி
வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் எப்பேர்பட்ட உடல் எடையையும் குறைத்துவிடலாம் என்று நம்பிக்கை அளிக்கிறார்கள் லெக்சி, டேனி தம்பதியர். எந்தவித மருந்து மாத்திரையும் இல்லாமல் உடல் எடையை கச்சிதமாக குறைத்த இந்த தம்பதிகளின் முயற்சியை நாமும் தெரிந்து கொள்வோமே..
கடந்த 2016 ஜனவரி ஒன்றாம் தேதி லெக்சியின் எடை 220 கிலோ. அவரது கணவர் டேனியின் எடை 127 கிலோ. காதலிக்கும்போது இவர்களின் ஒவ்வொரு சந்திப்புகளும், பஃபே விருந்துடன் 4 முதல் 5 தட்டு முழுவதுமான உணவுடன்தான் முடிந்திருக்கின்றன. திருமணத்திற்கு பின், இருவரும் சேர்ந்து 2016 ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு உறுதிமொழி ஏற்றார்கள். அது... எடையை குறைப்பது என்ற உறுதிமொழிதான்.
எடை குறைப்புக்கு மருந்து, மாத்திரைகள் இல்லை. உணவியல் நிபுணர்கள் யார் உதவியையும் நாடவில்லை. துரித உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது, காய்கறிகளை அதிகம் சேர்ப்பது மற்றும் முழுவதும் உடற்பயிற்சி என இறங்கிய இந்த தம்பதி, உட்கார்ந்து பார்க்கும் வேலைகளை தவிர்த்து ஓடியாடி விளையாடக்கூடிய பொழுதுபோக்குகளை தேர்ந்தெடுத்துக்கொண்டனர்.
தினசரி 4,000 கலோரிகளுக்கு மேல் சாப்பிட்டு வந்த இவர்கள், கலோரியை கணக்கிட்டு உண்ணத்தொடங்கியதன் விளைவு, இவர்களின் எடை படிப்படியாக குறையத் தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் தங்கள் ஒவ்வொரு படிநிலைகளையும் புகைப்படங்களாக பதிவு செய்ய ஆரம்பித்தனர். தற்போது லெக்சி தனது 220 கிலோ எடையில் 130 கிலோவை குறைத்து 90 கிலோ எடையுடன் இருக்கிறார். 127 கிலோ எடை கொண்ட இவரது கணவர் டேனி 35 கிலோ குறைந்து 92 கிலோ எடையுடன் இருக்கிறார்.
இவர்களின் வெற்றிக்கதை, எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.