துண்டு துண்டாக சூட்கேஸில் சடலம் - அலுவலக தோழியை பார்க்க சென்றவருக்கு நேர்ந்த விபரீதம்
மகாராஷ்டிராவில் நண்பர்களைப் பார்க்கச்சென்ற வங்கி ஊழியரை 12 துண்டுகளாக வெட்டி சூட்கேஸில் வைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுஷில்குமார் சர்நாய்க்(31). இவர் கிராண்ட் சாலையிலுள்ள ஒரு முன்னணி வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டிசம்பர் 12ஆம் தேதி தனது நண்பர்களைப் பார்த்துவிட்டு மறுநாள் வந்துவிடுவதாக தனது தாயாரிடம் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். ஆனால் திங்கட்கிழமை ஆகியும் தனது மகன் வீட்டிற்கு வரததால் பதற்றமடைந்த சர்நாயக்கின் தாயார், அவருடைய நண்பர்களைத் தொடர்புகொண்டு விசாரித்து இருக்கிறார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த விவரமும் தெரியவராததால், வொர்லி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியபோது புதன்கிழமை ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு கால்வாயில் இரண்டு சூட்கேஸ்கள் மிதந்து வந்ததாகவும், அந்த சூட்கேஸ்களில் சர்நாயக்கின் உடல் 12 துண்டுகளாக வெட்டப்பட்டு வைத்திருப்பதாகவும் நேரல் பகுதி காவல்நிலையத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. இரண்டு சூட்கேஸ்களிலும் சர்நாயக்கின் வலது கை துண்டு காணாமல் போயிருப்பதை ஆராய்ந்த போலீஸார், இதுகுறித்து மேலும் விசாரணையைத் தொடர்ந்திருக்கின்றனர்.
இரண்டு சூட்கேஸ்களிலும் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களை வைத்து அந்தக் கடைக்கு சென்று விசாரணை நடத்தியதில், அந்த சூட்கேஸை வாங்கிச்சென்றவர்களை கடைக்காரர் அடையாளம் காட்டியிருக்கிறார். அதன்படி 41 வயதான சார்லஸ் மற்றும் அவரது மனைவி சலோனி இருவரிடமும் நேரில் போலீஸார் விசாரணை நடத்தி இருக்கின்றனர். அப்போது இருவரும் கொலை செய்ததை ஒத்துக்கொண்டனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், சர்நாயக்கும், சலோனியும் முன்பே பி.பி.ஓ-வில் வேலை செய்து வந்திருக்கின்றனர். அன்று சர்நாயக் சலோனியை சந்தித்தபோது மோசமாக வர்ணித்ததால் சார்லஸ் ஆத்திரமடைந்திருக்கிறார். அதனால் சர்நாயக்கின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்திருக்கிறார். அதற்கு சலோனியும் உதவியிருக்கிறார். பிறகு சர்நாயக்கின் உடலை என்ன செய்யலாம் என்று யோசித்து திட்டமிட்டிருக்கின்றனர். அதன்படி, மறுநாள் கடைக்குச் சென்று இரண்டு சூட்கேஸ்களை வாங்கிவந்து அதில் சர்நாயக்கின் உடலை இரண்டு துண்டுகளாக வெட்டில் கால்வாயில் போட்டிருக்கின்றனர் என்று தெரிவித்தனர்.
கொலை குற்றத்திற்காக சார்லஸ் மற்றும் அவரது மனைவி இருவரும் கைது செய்யப்பட்டதுடன், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.