‘ரூ2. கோடி மோசடி’ - நிதி நெருக்கடியால் குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
தங்களது குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தம்பதி எட்டாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியில் ஒரு இளம் தம்பதி ஒன்று அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 11 வயதில் ஒரு மகனும் இருந்தனர். இன்று அதிகாலை இந்த தம்பதியர் இருவரும் தங்களது அடுக்க மாடி குடியிருப்பின் 8ஆவது மாடியிலிருந்து குதித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுடன் சேர்ந்து மற்றொரு பெண்ணும் மாடியில் இருந்து குதித்ததாக தெரிகிறது.
இவர்கள் மாடியிலிருந்து குதித்த சத்தத்தை கேட்ட காவலாளி காவல்துறைக்கு தகவல் அளித்தார். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதன்பின்னர் தம்பதியின் வீட்டிற்குள் சென்று பார்த்தப் போது இவர்களின் இரண்டு குழந்தைகளும் படுக்கையில் இறந்து கிடந்துள்ளனர். அத்துடன் வீட்டில் ஒரு தற்கொலை தொடர்பான வாக்குமூலம் கிடைத்துள்ளது.
அதில் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால் தற்கொலை செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியை ஒருவர் 2 கோடி ரூபாய் வரை ஏமாற்றியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. தம்பதியுடன் மாடியில் இருந்து குதித்தவர் அவர்களது தொழில் பார்னர் எனவும் விசாரணையில் தெரியவந்தது.
ஒரே நேரத்தில் ஒரு சிறுமி, ஒரு சிறுவன் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.