குழந்தை இல்லா ஏக்கம்.. பக்கத்துவீட்டுச் சிறுமியைப் பலிகொடுத்த தம்பதி! கோவாவில் பகீர் சம்பவம்
அறிவியல் உலகு நாளுக்கு நாள் வளர்ந்து வரும் நிலையில், இந்தியாவில் இன்னும் சில இடங்களில் மூடநம்பிக்கை மாறாமல் இருப்பது வேதனையின் உச்சமாக உள்ளது. அந்த மூடநம்பிக்கையால் சிறுமிகளின் உயிர்கள் பலிபோவதும் தொடர்கதையாகி வருகிறது. அதன்படி, கோவாவில் தம்பதி ஒருவர் குழந்தை இல்லாத குறையைப் போக்க அண்டைவீட்டாரின் சிறுமியைப் பலி கொடுத்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கோவாவைச் சேர்ந்தவர் பாபாசாகேப் அலார் (52). அவரது மனைவி பூஜா (45). தம்பதியினர் மந்திரவாதி ஒருவரிடம் சென்று தங்கள் துயரைப் போக்க வழி கேட்டுள்ளனர். அதற்கு அவர் சில பரிகாரங்களை சொல்லி அனுப்பியுள்ளார். இந்த நிலையில், தம்பதியினர் வசிக்கும் இருப்பிடத்துக்கு அருகே 5 வயது சிறுமி காணாமல் போனதாகப் புகார் அளித்துள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் ஷிவ்ராம் வைகங்கர் தெரிவித்தார்.
வீட்டின் வெளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் சோதனை செய்தனர். தம்பதியினர் தங்கியிருந்த வீட்டிற்குள் 5 வயது சிறுமி நுழைந்ததும், அதன்பின்னர் அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியே வரவில்லை என்பதும் தெரியவந்தது. தம்பதியினரை போலீசார் பிடித்து விசாரித்ததில், குழந்தை இல்லாத தம்பதியினர் மந்திரவாதி ஒருவரிடம் குடும்பப் பிரச்னைகள் தீர ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் 5 வயது சிறுமியைக் கொன்று புதைத்தால் பிரச்னைகள் தீரும் என்று கூறியுதாகவும், இதையடுத்து தங்கள் வீட்டிற்கு அருகில் வசிக்கும் ஐந்து வயது சிறுமியைப் பலியிட முடிவு செய்து அவரைக் கொன்று, உடலை வீட்டின் பின்புறத்தில் புதைத்ததாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அதன்பேரில், அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.