தங்கள் தலையை தாங்களே வெட்டி உயிர் பலி சடங்கு செய்த தம்பதி - குஜராத்தில் அதிர்ச்சி!
ஒரு தம்பதி தலை வெட்டும் இயந்திரத்தை வீட்டிலேயே தயாரித்து தங்கள் தலையை தாங்களே வெட்டி உயிர் பலி சடங்கு செய்த சம்பவம் குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் வின்ச்சியா கிராமம் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஹேமுபாய்(38) - ஹன்சாபென்(35) தம்பதி. இவர்கள் தங்கள் வயலில் குடிசை அமைத்து தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் இருவரும் தங்கள் தலையை தாங்களே வெட்டி தங்களை பலியாக செலுத்தியுள்ளனர். இதுகுறித்து துணை ஆய்வாளர் இந்திரஜீத்சின் ஜடேஜா கூறுகையில், “தலையை வெட்டியவுடன், அது நெருப்பு பலிபீடத்தில் விழும்படி கணவன், மனைவி இருவரும் இதனை ஏற்கெனவே திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து தற்கொலை குறிப்பு ஒன்றையும் அவர்கள் எழுதி வைத்துள்ளனர். அதில், கயிற்றை இழுத்தால் மேலுள்ள கத்தியானது தலையை வெட்டும்படி ஏற்கனவே இயந்திரத்தை தயாரித்து வைத்ததாகவும், அதன்பிறகு தாங்கள் திட்டமிட்டபடி, இயந்திரத்தின் முன்பு நெருப்பு பலிபீடத்தை உண்டாக்கி, கயிற்றை இழுத்தவுடன், கத்தியானது தலையை துண்டாக்கி, தலை நெருப்பில் விழும்படி ஏற்பாடு செய்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றனர். மேலும், தங்கள் குழந்தைகள் மற்றும் பெற்றோரை கவனித்துக்கொள்ளும்படி உறவினர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்” என்று கூறினார்.
இந்த சம்பவம் குறித்த தகவலானது சனிக்கிழமை இரவு - ஞாயிற்றுக்கிழமை காலைக்குள் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கடந்த ஒரு வருடமாக இந்த தம்பதி தங்கள் குடிசையில் பிரார்த்தனைகளை மேற்கொண்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடைய பெற்றோரும் அருகில் வசித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை இந்த சம்பவம் குறித்து உறவினருக்கு தெரியவந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திலிருந்து தற்கொலை குறிப்பு பெறப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விபத்து மரணமாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், உடல்களை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர்.