முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது - பிரதமர் மோடி உறுதி

முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது - பிரதமர் மோடி உறுதி
முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதை ஏற்க முடியாது - பிரதமர் மோடி உறுதி

முஸ்லிம் பெண்களின் உரிமை பறிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். ஹிஜாப் விவகாரம் நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ள நிலையில், மோடி இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் 58 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 14-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு சஹரான்பூரில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

முஸ்லிம் பெண்களின் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. குறிப்பாக, முஸ்லிம் பெண்களுக்கு காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த அநீதியான முத்தலாக் நடைமுறையை ஒழித்தது பாஜகதான். இதனால் பாஜகவுக்கு இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் ஆதரவளித்து வருகின்றனர். இதனைக் கண்டு எதிர்க்கட்சிகள் கலக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக, பாஜக குறித்து பொய்யான குற்றச்சாட்டுகளை அவை பரப்பி வருகின்றன.

அந்த வகையில், தற்போது முஸ்லிம் பெண்களின் உரிமைகளை பறிக்கவும், அவர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும் புதிய வழிகளை சிலர் கண்டுபிடித்து வருகிறார்கள். இதனை ஒருபோதும் பாஜக ஏற்றுக்கொள்ளாது. உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை உறுதி செய்ய இங்கு பாஜக அரசு நீடிப்பது அவசியம். இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தை ஆட்சி செய்த கட்சிகள் யாவும், தங்கள் குடும்ப நலனில் மட்டுமே அக்கறை காட்டின. அதனால் மாநிலம் எந்தத் துறையிலும் வளர்ச்சி அடையாமல் இருந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் உத்தரப்பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டதால் அனைத்து துறைகளிலும் மாநிலம் தற்போது முன்னேறி வருகிறது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com