திருடியது எப்படி - 94 கோடி திருட்டின் பின்னணி

திருடியது எப்படி - 94 கோடி திருட்டின் பின்னணி
திருடியது எப்படி -  94 கோடி திருட்டின் பின்னணி

புனேயில் உள்ள காஸ்மோஸ் வங்கியில் இருந்து திடீரென ரூ.94 கோடி காணாமல் போனது. இது எப்படி என சுதாரிப்பதற்குள் பணப்பரிமாற்றம் நடந்து முடிந்தது. இப்போது வரை அதனை செய்தது யார் என கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை விழிபிதுங்கி நிற்கிறது. இதற்கிடையில் சில தொழில்முறை ஹேக்கர்களோடு புனே மகராஷ்டிரா போலீஸ் ஆலோசனை நடத்தியது. எப்படியெல்லாம் காஸ்மோஸ் வங்கி சர்வரை ஹேக் செய்ய முடியும் என்றெல்லாம். நடைமுறையில் அதற்கான சாத்தியம் உண்டா என்ற பல்வேறு கோணங்களில் இந்த ஆலோசனை நீண்டது.

காவல்துறையின் இந்த ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் அவர்களுக்கு ஒரு முக்கிய தகவல் கிடைத்தது. அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுமார் ரூபாய் 78 கோடி திருடப்பட்டிருக்கிறது. ஆனால் எப்படி நடந்தது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. மற்றொரு முக்கிய தகவல் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்தே பணத்தை எடுத்திருக்கிறார்கள். ஆனால் எந்த வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படவில்லை. மாறாக வங்கியில் ஒரு கணக்கை உருவாக்கி, அதில் பணத்தை மாற்றி, ஏடிஎம் கார்டையும் உருவாக்கி பணம் திருடப்பட்டிருக்கிறது.

கணக்கு இல்லாத ஒருவர் வங்கியை நேரடியாக அணுகாமல் எப்படி கணக்கை உருவாக்க முடியும் ? அதற்கான வாய்ப்பில்லையே என அதிகாரிகள் கூறிய போது, வங்கியின் சர்வரை ஹேக் செய்து இதனை சாத்தியப்படுத்தலாம் என அதிர்ச்சி கொடுத்தனர் ஹேக்கர்கள். அதோடு இது போன்று ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் “குளோன் கார்டு” என்று சொல்லப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படும் கார்டுகளை பயன்படுத்துவார்கள். ஏடிஎம் இயந்திரத்தில் பணம் குறைந்தாலும் தொடர்புடைய வங்கிக்கு சந்தேகம் வராது. வாடிக்கையாளர்களே பயன்படுத்துவதாக வங்கி நினைத்து கொள்வதால், வாடிக்கையாளர் விபரங்களை பரிசோதிக்கும் வாய்ப்பும் குறைவு என்றனர். தலை சுத்தியது மகராஷ்டிரா காவல்துறைக்கு.

ஒவ்வொரு வங்கி சர்வரும் ஒவ்வொரு வகையில் அமைக்கப்பட்டிருக்கும். அது எப்படி அமைக்கப்படும் என தெரிந்த நபரால் மட்டுமே உள்ளே புக முடியும். குறிப்பாக இதற்காக மிகப் பெரிய ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டிருக்க முடியும். ஏனெனில் சர்வரை ஹேக் செய்தல், பணத்தை சந்தேகம் வராமல் கணக்குக்கு மாற்றுதல், ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் எடுத்தல் என ஒவ்வொன்றிற்கும் தொடர்பு இருக்கிறது. இதனை பெரும்பாலும் சர்வர் பராமரிப்பு நேரங்களில் செய்திருக்கலாம். சர்வரை ஹேக் செய்யும் போது தெரியாமல் இருக்க அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட செய்யும் யுக்திகள் கூட ஹேக்கர்களால் பின்பற்றப்படுகிறது என்றனர் தொழில்முறை ஹேக்கர்கள்.

காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். வெளிநாடுகளில் எப்படி பணம் திருடப்பட்டது, புகார், விசாரணை நிலவரம், சர்வர் அமைப்பு போன்றவை குறித்த தகவல்கள் பெறப்பட்டு , வழக்கை துரிதமாக விசாரிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏடிஎம் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தை திருடி வந்த நிலையில், இப்போது யாரும் கண்டுபிடிக்க இயலாத வகையில் ஹேக்கிங் மூலம் திருடுதல், காவல்துறைக்கு புதிய சவாலாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com