“கார்பரேட் வரி குறைப்பு 130 கோடி மக்களின் வெற்றி” - பிரதமர் மோடி ட்வீட்
கார்பரேட் நிறுவனங்களுக்கு வரி குறைப்பு செய்துள்ளது 130 கோடி மக்களுக்கான வெற்றி என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பொருளாதாரத்தின் இந்த மந்தநிலை, இயல்பான ஒன்றுதான் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் 5 ஆண்டுகளுக்குள் இந்தியப் பொருளாதாரத்தை 5 ட்ரில்லயன் டாலராக கொண்டு வருவதே இலக்கு என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வருகிறார். ஏற்கெனவே பல சலுகைகள் தொழில் முனைவோர்களுக்கு அறிவித்துள்ள அவர், தற்போது மேலும் சில சலுகைகளை அறிவித்துள்ளார்.
அதன்படி, வரும் அக்டோபருக்கு பிறகு தயாரிப்புத்துறையில் தொடங்கப்படும் நிறுவனங்களுக்கு 15 சதவிகிதம் மட்டுமே வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நிறுவனங்களுக்கான விதிக்கப்பட்டு வந்த கார்பரேட் வரி என்றழைக்கப்படும் வருமானவரி 22 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், நிர்மலா சீதாராமனின் அறிவிப்புக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி தனது ட்விட்டரில், “கார்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது வரலாற்று முக்கியத்துவமானது. இந்த முடிவு மேக் இன் இந்தியா திட்டத்துக்கு ஊக்கமளிக்கும். உலகம் முழுவதும் இருந்து தனியார் முதலீடுகளை ஈர்க்கும். நம்முடைய தனியார் துறையில் போட்டியை வளர்க்கும். அதன் மூலம் வேலை வாய்ப்புகள் உருவாகும். இது 130 கோடி மக்களுக்கான வெற்றியாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “கடந்த சில வாரங்களாக வெளியாகி வரும் அறிவிப்புகள், இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு தடைகளற்ற சூழலை உருவாக்கும். அனைத்து தரப்பு மக்களுக்குமான வாய்ப்புகளை அதிகாரிக்கும். இந்திய பொருளாதாரம் 5 ட்ரில்லியன் டாலர் என்பதை நோக்கி முன்னேறும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.