‘கொரோனா எதிரொலியால் பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம்’- கர்நாடக அரசு
கொரோனா பாதிப்பின் எதிரொலியால் மக்கள் பொது இடங்களில் கூட வேண்டாம் என கர்நாடக அரசு வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகபட்சமாக 17 பேருக்கும், மகாராஷ்டிராவில் 11 பேரும், உத்திரப் பிரதேசத்தில் 10 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களை தடுத்து தனி இடங்களில் தங்க வைப்பதற்காக இந்தியா முழுவதும் 7 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளிகள், கோயில்கள் மற்றும் விளையாட்டு போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கர்நாடகாவில் தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் திருமண கூடங்கள், பப்புகள் உள்ளிட்டவையும் மக்கள் கூடும் இடம் என்பதால் அவற்றை ஒரு வாரத்திற்கு மூடுமாறு முதலமைச்சர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பொது இடங்களில் மக்கள் கூட வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.