டெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியை கிளப்புகிறீர்களா?: மத்திய அரசு மீது மம்தா சாடல்

டெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியை கிளப்புகிறீர்களா?: மத்திய அரசு மீது மம்தா சாடல்

டெல்லி வன்முறையை திசைதிருப்ப கொரோனா பீதியை கிளப்புகிறீர்களா?: மத்திய அரசு மீது மம்தா சாடல்
Published on

டெல்லியில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்கள் குறித்த செய்திகளை திசைதிருப்பவே மத்திய அரசு கொரோனா வைரஸ் குறித்த பீதியை கிளப்புவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று தெரிவித்தார். நேற்றுவரை கொரோனா பாதிப்பு வெறும் 6 ஆக இருந்த நிலையில், தற்போது 28 ஆக உயர்ந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை டெல்லி மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த இருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பின்னரே கொரோனா குறித்த செய்திகள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கின்றன. இதற்கு முன்பாக, கேரளாவைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், அவர்கள் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், டெல்லி வன்முறை சம்பவத்தை திசை திருப்பவே கொரோனா குறித்த பீதியை மத்திய பாஜக அரசு கிளப்பி வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இன்று சிலர் கொரோனா, கொரோனா என அதிகமாக கத்திக் கொண்டிருக்கிறார்கள். அதுஒரு பயங்கரமான நோய்தான், ஆனால், அதுகுறித்து பீதியை கிளப்ப வேண்டாம்.

சில ஊடகங்கள் டெல்லி வன்முறை சம்பவத்தை திசை திருப்பவே இந்த செய்திகளை ஹைப் செய்கிறார்கள். பாதிப்பு ஏற்படும்போது அந்த தகவலை தெரிவியுங்கள். ஆனால், கொரோனா குறித்த செய்திகளை பரப்பக் கூடாது. டெல்லியில் இறந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரஸால் இறக்கவில்லை” என்று காட்டமாக தெரிவித்துள்ளார். தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தின் புனியாத்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், “தற்போது இறப்பவர்கள் கூட இப்படியொரு பயங்கரமான வைரஸால் இறக்கிறார்கள் என்பது தெரிகிறது. ஆனால், ஆரோக்கியமான மக்கள் கருணையின்றி டெல்லியில் கொல்லப்பட்டார்கள். பாஜக அரசு இதுவரை மன்னிப்பு கூட கேட்கவில்லை. அது அவர்களது ஆணவம். அவர்கள் கோலி மாரோ என்று சொல்கிறார்கள். மேற்குவங்கமும், உத்தரப் பிரதேசமும் ஒன்று அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார் மம்தா பானர்ஜி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com