அதிகபட்ச கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.4,500 - தனியார் ஆய்வகங்களுக்கு அரசு உத்தரவு
தனியார் ஆய்வகங்கள் கொரோனா பரிசோதனை கட்டணமாக அதிகபட்சம் ரூ.4,500 மட்டுமே வசூலிக்க வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கொரோனா குறித்த அச்சத்தால் அரசு மருத்துவமனைகளை நாடுவது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள மத்திய அரசு, என்.ஏ.பி.எல். எனப்படும் ஆய்வகங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் தேசிய வாரியத்திடம் ரியல் டைம் பி.சி.ஆர். சோதனை நடத்த அனுமதி பெற்றுள்ள அனைத்து தனியார் ஆய்வகங்களும், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் நெறிமுறைகளின்படி சோதனை நடத்தப்பட வேண்டும் என்றும், உரியப் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும் எனவும் தனியார் ஆய்வகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆய்வுக் கட்டணமாக அதிகபட்சம் ரூ.4,500 ரூபாய் மட்டுமே வசூலிக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட பரிசோதனைக்கு ரூ.1,500, உறுதிப்படுத்தும் ஆய்வுக்கு ரூ,3,000 வசூலிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தனியார் ஆய்வகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மாதிரிகள் யாரிடமிருந்து சேகரிக்கப்பட்டதோ அவரின் விவரங்களையும், ஆய்வு முடிவுகளையும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலிடம் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவரின் பரிந்துரையின்றி பரிசோதனை மேற்கொள்ளக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறும் தனியார் ஆய்வகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.