கொரோனா இரண்டாம் அலை: இந்தியாவில் 2 மாதங்களில் 2.27 கோடி பேர் வேலை இழப்பு

கொரோனா இரண்டாம் அலை: இந்தியாவில் 2 மாதங்களில் 2.27 கோடி பேர் வேலை இழப்பு
கொரோனா இரண்டாம் அலை: இந்தியாவில் 2 மாதங்களில் 2.27 கோடி பேர் வேலை இழப்பு
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக இரண்டு மாதங்களில் 2 கோடியே 27 லட்சம் பேர் வேலை இழந்தது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு கொரோனா தொற்று மிகத்தீவிரமாக பரவிய போது ஏராளமானோர் வேலை இழந்ததைப் போலவே, இந்த ஆண்டு இரண்டாவது அலையின் போதும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்தனர். Centre For Monitoring Indian Economy எனப்படும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம் நடத்திய ஆய்வில் கடந்த மே மாதத்தில் 11.9 சதவிகிதமாக இருந்த வேலையின்மை ஜூன் மாதத்தில் 9.17 சதவிகிதமாக குறைந்தது. எனினும் ஏப்ரல் மாதத்தில் 7.97 சதவிகிதமாக இருந்த வேலையின்மையோடு ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை அதிகமாகவே உள்ளது. 
இதில் நகர்ப்புற வேலையின்மையை மட்டுமே கருத்தில் கொண்டால் மே மாதத்தில் 14.73 சதவிகிதமாக இருந்தது ஜூன் மாதத்தில் 10.7 சதவிகிதமாக குறைந்தது. கிராமப்புறங்களை பொறுத்தவரை மே மாதத்தில் 10.63 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதத்தில் 8.75 சதவிகிதமாக குறைந்திருக்கிறது.  கடந்த ஆண்டில் ஏப்ரல், மே, ஜூன் என மூன்று மாதங்களுக்கு பிறகு இவ்வாண்டு மே மாதத்தில்தான் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை இரட்டை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. ஜூன் மாத இறுதியில் இந்தியாவிலேயே அதிகபட்சமாக புதுச்சேரியில் 47.1 சதவிகிதம் பேர் வேலை வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். 
இதை தொடர்ந்து ஹரியானாவில் வேலைவாய்ப்பின்மை 27.9 சதவிகிதமாக இருந்தது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மே மாதத்தில் 28 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பினமை ஜூன் மாதத்தில் 8.3 சதவிகிதமாக குறைந்துள்ளது. தமிழகத்தில் நடுத்தர, சிறு, குறு, நிறுவனங்கள் பொது முடக்கத்தால் மூடப்பட்டிருந்ததால் மே மாதத்தில் வேலையின்மை அதிகரித்ததாகவும், ஜூன் மாதத்தில் அவை செயல்பட தொடங்கியதால் வேலையின்மை குறைந்ததாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர். 
நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை இவ்வாண்டு ஏப்ரல் மாதம் முதலே அதிகரித்து வந்ததாக கூறும் இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையத்தின் தலைமை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ், கிரமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பது சமீபத்திய நிகழ்வு எனக் குறிப்பிட்டார். கடந்த மூன்று மாதங்களாக அதிகமாக இருந்த வேலைவாய்ப்பின்மை தற்போது குறையத் தொடங்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com