கொரோனா தாக்கம்: பாதிப்பை சந்திக்கும் மொபைல் போன் உற்பத்தியாளர்கள்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஏப்ரல் மாதத்திற்குள் உற்பத்தி மதிப்பில் சுமார் 6000 கோடி ரூபாய் வரை இந்திய மொபைல் போன் உற்பத்தியாளர்கள் பாதிப்பை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மொபைல் போன்களுக்குத் தேவையான உதிரிபாகங்கள் சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. கொரோனா காரணமாக சீனாவில் உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டிருந்ததால், இந்திய நிறுவனங்கள் கடந்த 10 நாட்களாக சிக்கலை எதிர்கொண்டு வருகின்றன.
சீனாவில் தற்போது செல்போன் உதிரிபாக நிறுவனங்கள் உற்பத்தியை தொடங்கியுள்ளதால் ஏப்ரல் மாத இறுதிக்குள் நிலைமை சீராக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உற்பத்தி தடை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 15 முதல் 20 சதவிகிதம் வரை உற்பத்தி மதிப்பில் பாதிப்பு ஏற்படும் சூழல் இருப்பதாக மொபைல் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
குறிப்பாக, உற்பத்தி மதிப்பின் அடிப்படையில் மார்ச் மாதத்தில் 3,500 கோடி ரூபாய் வரையிலும், ஏப்ரல் மாதத்தில் 2,500 கோடி ரூபாய் வரையிலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. எனவே கடுமையான பாதிப்பிலிருந்து உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.