மகாராஷ்டிராவில் அமைச்சர் உட்பட ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா
மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவர் உள்பட ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அங்கு நோய் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 6ஆயிரத்து 500ஐ நெருங்கியுள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முழுவதும் 6, 427 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 840 பேர் குணமடைந்துள்ளனர். 283 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, தேசியவாத கட்சியைச் சேர்ந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில், நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்ட இப்பகுதியில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.