இந்தியாவில் கொரோனா அதிகம் பாதித்த நகரமாக டெல்லி மாறியுள்ளது. அங்கு 70 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலம்தான் மிக அதிக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் மட்டும் 68 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லியின் பாதிப்பு எண்ணிக்கை மும்பையைவிட அதிகரித்துள்ளது. டெல்லியில் 70 ஆயிரத்து 300 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிகிச்சையில் உள்ளனர். இதன் மூலம் டெல்லி, கொரோனா பாதித்த இந்திய நகரங்களின் பட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது. அதிக அளவு பரிசோதனைகள் செய்யப்படுவதே எண்ணிக்கை அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. டெல்லியில் ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் வரை சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்ததாக சென்னை, மும்பை நகரங்களில் அதிக பரிசோதனைகள் நடக்கின்றன. எனினும் டெல்லியில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் அளவு 3.36 சதவிகிதமாக இருப்பது கவலை தரக்கூடிய விஷயமாக உள்ளது.
படுக்கை பற்றாக்குறை என்பது டெல்லி அரசுக்கு பெரும் சவாலாக இருந்து வந்த நிலையில் டெல்லியின் மிக முக்கியமான பகுதியான சத்தர்பூர் என்ற இடத்தில் பத்தாயிரம் படுக்கை வசதிகளை கொண்ட கோவிட் மையத்தை உருவாக்க மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த பத்து நாட்களுக்குள் இந்த மையம் செயல்பாட்டுக்கு வரும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். நிலைமை மோசமடையும் பட்சத்தில் மேலும் 20 ஆயிரம் படுக்கை வசதிகளையும் 250 ஐசியு வார்டுகளையும் அமைத்துத்தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறி உள்ளனர்.