மும்பை தாராவியில் வேகமாகப் பரவும் கொரோனா..! வீடு வீடாக சோதனை செய்யும் மருத்துவக் குழு..!
மும்பை தாராவி பகுதியில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், அங்கு மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தனிமனித இடைவெளி சரிவர பின்பற்றப்படுகின்றதா? என ட்ரோன் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியாக அறியப்பட்டிருக்கும் தாராவி, தமிழர்கள் பெருமளவில் வசிக்கும் இடமாகும். மகாராஷ்ராவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் இப்பகுதியையும் விட்டு வைக்கவில்லை. இங்கு நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தாராவி பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்திருக்கின்றது.
இந்த பெருந்தொற்று நோய்க்கு தாராவியில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். அப்பகுதியில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் என அஞ்சப்படுவதால் மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லட்சக்கணக்கானோர் வசிக்கும் இப்பகுதியில் மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
தாராவி மற்றும் மும்பையின் பல்வேறு பகுதிகளில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தாராவியில் மருந்தகங்களைத் தவிர அனைத்துக் கடைகளையும் மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி சரிவர கடைபிடிக்கப்படுகின்றதா? என்பதை காவல்துறையினர் ட்ரோன் மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதனிடையே, மும்பையின் கல்யாண் பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆறு மாத கைக்குழந்தை முழுமையாக குணமடைந்தது. பின்னர் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தக் குழந்தையை அண்டை வீட்டாரும், அப்பகுதி மக்களும் வாழ்த்துக்கூறி வரவேற்றனர்.