கொரோனா: தலைகீழாக மாறிவிட்ட ஷாப்பிங் பழக்கங்கள்..!
உலகம் முழுவதும் மக்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டது கொரோனா பரவல். அலுவலகப் பணிகள் முதல் ஷாப்பிங் வரையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது நுகர்வோரிடம் பொருட்கள் வாங்கும் அணுகுமுறைகளில் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஊரடங்கு அறிவிக்கப்பட்ட மார்ச் முதல் பெரும்பாலான நுகர்வோர்கள் ஆன்லைன் வழியாக ஷாப்பிங் செய்யத் தொடங்கியுள்ளனர். அத்தியாவசிய மற்றும் அதிக முக்கியத்துவம் இல்லாத பொருட்களையும் பாதுகாப்பான முறையில் ஆன்லைன் மூலமே வாங்கிவருகின்றனர். மனிதத் தொடர்பில்லாமல் பணப்பரிமாற்றங்களைச் செய்வதை பாதுகாப்பாக உணர்கின்றனர்.
மக்களிடம் மாறியுள்ள ஷாப்பிங் அனுபவங்கள் பற்றிய ஆய்வை யூ க்ளோவ் என்ற சர்வதேச சந்தை ஆய்வு நிறுவனம் செய்துள்ளது. இந்தியாவில் பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பத்து நிறுவனங்களில் ஆயிரம் நுகர்வோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் 69 சதவீதம் மக்கள் மனிதர்களுடன் தொடர்பில்லாத கட்டணம் செலுத்தும் முறையையே அதிகம் விரும்புகின்றனர்.
மேலும், பத்து பேரில் எட்டு பேர் வீட்டை விட்டு வெளியே சென்று ஷாப்பிங் செல்வதை விரும்பவில்லை. நுகர்வோரில் 63 சதவீதம் பேர் சில மாதங்களில் நேரடி ஷாப்பிங் செய்யும் நடைமுறை வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 53 சதவீத நுகர்வோர் அருகிலுள்ள சிறு மளிகைக் கடைகளில் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வதை விரும்புகின்றனர்.