#BREAKING | ஒடிசா ரயில் விபத்து: 3 ரயில்கள் மோதியதால் ஏற்பட்டதா? #LiveUpdates

கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்துகொண்டிருந்த விரைவு ரயில், ஒடிசா அருகே மற்றொரு ரயிலுடன் மோதியதில் தடம்புரண்டது. இதில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மூன்றாவதாக இன்னொரு ரயிலும் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.
Coromandel Express train accident
Coromandel Express train accidentTwitter

(இச்செய்தி அப்டேட் செய்யப்பட்டது)

கோரமண்டல் ரயில் கோர விபத்து

ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கோர ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் மாவட்டம் பாஹா நாகா பஜார் ரயில் நிலையம் அருகே இன்று இரவு 7.30 மணிக்கு சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸில், 7க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்ட நிலையில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நின்றுகொண்டிருந்த சரக்கு ரயிலில் இந்த ரயில் மோதியதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் உறுதியான காரணம் இன்னும் வெளியாகவில்லை. தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவயிடத்திற்கு விரைந்துள்ளனர்.

Coromandel Express train accident
Coromandel Express train accident

இதுவரை 50க்கும் மேற்பட்டோர் (இரவு 9:45 மணி வரை) உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 500 க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதுவரை 300 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாட்டு அறை எண் (6782 262 286) அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர், பிரதமர் மோடி இரங்கல்

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒடிசா முதலமைச்சர் நவீன்பட்நாயக்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். மீட்புப் பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். மேலும், அமைச்சர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளை அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஒடிசா அருகே ரயில்கள் விபத்துக்குள்ளானது அதிர்ச்சி அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். மீட்பு பணிகளை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கையை துரிதமாக எடுக்கவும் ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இரவு நேரம் என்பதாலும், வனப் பகுதி என்பதாலும் மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனர்.

மொத்தத்தில் இந்த ரயிலில் 2000 பயணிகள் இருந்ததாகவும், அதில் 200க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வர இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் குறித்த விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

விபத்து குறித்து அமைச்சர் சிவசங்கர் அளித்த விளக்கம்:

இந்நிலையில் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் ஒடிஷா செல்லவுள்ளார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை காலை முதல் விமானத்தில் ஒடிசாவுக்கு தமிழக குழு செல்ல உள்ளது. அமைச்சர் சிவசங்கருடன் வருவாய் துறை செயலாளர், போக்குவரத்து துறை செயலாளர், அர்ச்சனா ஐஏஎஸ் ஆகியோர் செல்ல உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் விபத்து தொடர்பாக அமைச்சர் கூறிய பரபரப்பு தகவல் குறித்து இந்த வீடியோவில் காணலாம்.

நிவாரணத்தொகை அறிவிப்பு

”காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். விபத்து நேரிட்ட இடத்திற்கு நாளை காலை செல்ல இருக்கிறேன்” என ஒடிசா முதல்வர் நவீன்பட் நாய்க் தெரிவித்துள்ளார்.

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தும் நோக்கில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி ஒடிசா விரைய இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ. 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ. 2 லட்சமும் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3 ரயில்கள் மோதி விபத்தா?

முதற்கட்ட தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் வேறொரு அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயிலும் அங்கு தடம் புரண்டு விபத்து ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

“இரவு 7 மணியளவில், ஷாலிமார் -சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 7 - 8 பெட்டிகள் பாலேஸ்வர் அருகே தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் விழுந்தன. சிறிது நேரம் கழித்து, அதே பகுதிக்குள் யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் வந்துள்ளது. இருப்பினும், அந்த ரயிலை உரிய நேரத்தில் நிறுத்த முடியாததால், தடம் புரண்டிருந்த கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா சென்ற மற்றொரு ரயிலும் மோதியதால், அதிலிருந்து 2 - 3 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இதனால் அந்தப் பகுதியில் 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கின்றன. இதனால்தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரயில் விபத்து காரணமாக ஹவுராக்குச் செல்லக்கூடிய 7 ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், விசாகப்பட்டினம் செல்லக்கூடிய 5 ரயில்கள் திருப்பி விடப்பட்டிருப்பதாகவும் கிழக்கு ரயில்வே செய்திகள் தெரிவித்துள்ளன.

ரயில் விபத்தில் சிக்கியிருப்பவர்களை காங்கிரஸ் தொண்டர்கள் காப்பாற்ற வேண்டும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அவசரகால எண்கள்

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக அவசரகால கட்டுப்பாடு அறை எண்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அவசர கட்டுப்பாட்டு அறை பாலசோர்(ஒடிசா): 91 6782262286, (சென்னை) 044-25330952, 044-25330953, 25354771 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ஒடிசா ரயில் விபத்து - அவசரகால எண்கள் அறிவிப்பு
ஒடிசா ரயில் விபத்து - அவசரகால எண்கள் அறிவிப்பு

ரயில் விபத்தின் நிலைமையைப் புரிந்துகொண்டு அரசு அதிகாரிகள், காவலர்கள் அனைவரும் உடனே பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, விடுமுறையில் இருப்பவர்கள்கூட, உடனே பணிக்குத் திரும்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாக ஒடிசாவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(இச்செய்தி மேலும் அப்டேட் செய்யப்படும்)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com