ஒரு நபரை கொடூரமாக தாக்கிய இரு போலீசார் : வீடியோ வைரலாகியதால் சஸ்பெண்ட்..!
மத்தியப் பிரதேசத்தில் போதையில் இருந்ததாக ஒருவரை கொடூரமாக தாக்கிய 2 போலீஸார் பணியிடை நீக்கம்செய்யப்பட்டனர்.
மத்தியப் பிரதேசத்தின் சிந்துவாரா காவல்நிலையத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் தலைமைக் காவலர் கிருஷ்ணா திங்ரே மற்றும் காவலர் ஆஷிஷ் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அங்கே இருந்த நபர் ஒருவரை போதையில் இருந்ததாக இருவரும் லத்தியால் கொடூரமாக தாக்கினர். அவர்கள் தாக்கியதை வீடியோவாக பதிவு செய்த சிலர், அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாகியது.
இதையடுத்து அந்தக் காவலர்கள் இருவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து தெரிவித்தனர். அத்துடன், இந்தச் சம்பவத்திற்குப் பலரும் தங்கள் கண்டனங்களையும் வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து தாக்குதல் நடத்திய இருவரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இன்று இரண்டு காவலர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கு ஆளான நபர் தற்போது சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நடந்து 10 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டதாகவும், தற்போது அந்த நபருக்கு பெரிய காயங்கள் எதுவும் இல்லை எனவும் சிந்துவாரா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் விவேக் அகர்வால் தெரிவித்துள்ளார்.