உ.பியில் பரிதாபம்: கல்வீசி தாக்கியதில் மீண்டும் ஒரு போலீஸ்காரர் உயிரிழப்பு
உத்தரபிரதேச மாநிலம் காஜிபுரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல் வீசி தாக்கியதில் போலீஸ் கான்ஸ்டபிள் உயிரிழந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் புலந்த்ஷர் மாவட்டத்தில் உள்ள மஹ்வா கிராமத்தின் வனப் பகுதி யில் 25 பசுக்கள் இறந்த நிலையில் கிடந்ததாக தகவல் வெளியானது. இதனையடுத்து, சட்டவிரோத பசு வதைக்கூடம் செயல்படுவதாக் கூறி கிராமத்திற்குள் திரண்ட வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்டவர்களுக்கும், போலீஸ்காரர்களுக் கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் ஈரம் காய்வதற்குள் இன்னொரு போலீஸ்காரரும் அங்கு நேற்று கொல்லப்பட்டுள்ளார்.
இங்குள்ள காஜிபுர் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அவருடன் மாநில முதலமைச்சர் ஆதித்யாநாத்தும் கலந்துகொண்டார். நிஷாத் கட்சியைச் சேர்ந்தவர்கள், பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த முயன்றனர். நிகழ்ச்சி முடிந்து பிரதமர் சென்றபின், அதில் பங்கேற்ற பாஜக தொண்டர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட நிஷாத் கட்சியினர், அவர்கள் மீது கல்வீசி தாக்கினர். போராட்டக்காரர்களை சமாதானப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது, பிரதமர் பாதுகாப்புக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்த போலீசார் மீது, கல்வீசி தாக்கினர். இதில் சுரேந்திர வட்ஸ் (45) என்ற போலீஸ் கான்ஸ்டபிள் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 போலீசார் காயம் அடைந்தனர். இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்த உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த போலீஸ் கான்ஸ்டபிள் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் இழப்பீடும் அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக அறிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே மாதத்தில் இரண்டு போலீசார் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.