மனிதம் இன்னும் மரணிக்கவில்லை.. இப்படி ஒரு ஆபீசரா..? புல்லரிக்க வைக்கும் நேசம்..!

மனிதம் இன்னும் மரணிக்கவில்லை.. இப்படி ஒரு ஆபீசரா..? புல்லரிக்க வைக்கும் நேசம்..!

மனிதம் இன்னும் மரணிக்கவில்லை.. இப்படி ஒரு ஆபீசரா..? புல்லரிக்க வைக்கும் நேசம்..!
Published on

மனிதம் இன்னும் சாகவில்லை. மனிதாபிமானத்திற்கு முன் உதாரணமாக வாழ்ந்து வருகிறார் டெல்லியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

பணம் பத்தும் செய்யும்.. பணத்திற்கு தான் மதிப்பு.. பணம் இல்லையென்றால் பெற்ற மகன் கூட தாயை கண்டு கொள்ளமாட்டான் என வளர்ந்து வரும் நாகரிக உலகில் பலர் சொல்ல நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆம். உண்மையில் பணத்திற்கு தான் அதிகமாக சிலர் மதிப்பு கொடுக்கின்றனர். பணம் வந்ததும் உறவினர்களை கண்டு கொள்வதில்லை. வேறு உலகில் வாழ்வது போல் சிலர் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் பணத்திற்கு ஒரு சிலர் முக்கியத்துவம் கொடுத்தால் அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுக்க ஆயிரம் பேர் உண்டு என்பதே உண்மை. அன்பிற்கும், மனிதாபிமானத்திற்கும் முன் உதாராணமாக வாழ்ந்து வருகிறார் டெல்லியை சேர்ந்த போலீஸ் அதிகாரி ஒருவர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் சர்தார் மான் சிங். ட்ரக் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி மாதம் 9-ம் தேதி கொள்ளையர் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார் சர்தார் மான் சிங். இதனால் அவரின் வருமானத்தை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த, சர்தாரின் குடும்பம் நிர்கதியற்ற நிலைக்கு உள்ளானது. குடும்பத்தில் 5 பேரும் என்ன செய்வது என்று வருங்காலத்தை நினைத்து கண் கலங்கி நின்றனர். அந்த நேரத்தில் டெல்லியில் இருந்து அவர்களுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. போனில் பேசியவர் டெல்லி போலீஸ் துணை ஆணையர் அஸ்லாம் கான். “ உங்கள் குடும்பத்தின் நிலை எனக்கு புரிகிறது. வருத்தப்படாதீர்கள். என்னால் முடிந்த உதவிகளை நான் உங்களுக்கு செய்கிறேன். மாதந்தோறும் எனக்கு வரும் வருமானத்தில் சரிபாதியை நான் உங்களது இல்லத்திற்கு அனுப்பி வைக்கிறேன். அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் மூலம் ஏதாவது உதவி பெற்றுத்தர முடியுமா என்பது குறித்தும் முயற்சிக்கிறேன்” என ஆறுதல் கூறியிருக்கிறார். சர்தாரின் குடும்பத்தினர் முதலில் மனம் இல்லையென்றாலும் வாழ்வதற்கு பணம் தேவைப்படுமே என்ற எண்ணத்தில் அஸ்லாம் கானின் உதவியை ஏற்க முன்வந்திருக்கின்றனர்.

அதன்படி கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் சரிபாதியை சர்தாரின் குடும்பத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார் அஸ்லாம் கான். பண உதவி மட்டுமே அவர் செய்யவில்லை. தினந்தோறும் அவர்களின் வீட்டிற்கு குறுஞ்செய்தி அனுப்பி அவர்களின் உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். மூன்று நாளுக்கு ஒரு முறை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் அஸ்லாம் கான், சர்தாரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக உள்ளனரா என்பதை உறுதி செய்து கொள்கிறார்.

பக்கத்து வீட்டில் இருக்கும் யாருக்கேனும் ஆபத்து என்றால் கூட அருகிலிருப்பவர்கள் உதவ முன்வருவதில்லை. அப்படியிருக்க யார் என்று தெரியாத, அதுவும் தன் மாநிலத்தை சேராத ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் கஷ்டப்படுகிறார்கள் எனத் தெரிந்தவுடன் மனம் நொந்து அவர்களுக்கு தனது ஊதியத்தை வழங்கி வருகிறார் ஐபிஎஸ் அதிகாரி அஸ்லாம் கான். மனிதம் இன்னும் மரணிக்கவில்லை என்பது முன் உதாரணமாக வாழ்ந்து அஸ்லாம் கானிற்கு பலரும் தங்களது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com