பத்திரிகையாளர்களை அவமதித்ததால் சர்ச்சை: மீம் வடிவில் மன்னிப்புக்கோரிய மஹூவா மொய்த்ரா!

பத்திரிகையாளர்களை அவமதித்ததால் சர்ச்சை: மீம் வடிவில் மன்னிப்புக்கோரிய மஹூவா மொய்த்ரா!

பத்திரிகையாளர்களை அவமதித்ததால் சர்ச்சை: மீம் வடிவில் மன்னிப்புக்கோரிய மஹூவா மொய்த்ரா!
Published on

பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வகையில் பேசியதற்குக் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீம் வடிவில் மன்னிப்புக் கோரியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா சில நாள்களுக்கு முன், மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டம் கயேஸ்பூரில் நடந்த கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டார். நிகழ்ச்சிக்கு உள்ளூர் பத்திரிகையாளர்கள் சிலர் கட்சி நிர்வாகிகளின் அழைப்பின்பேரில் செய்தி சேகரிக்க சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ காட்சிகளில், பத்திரிகையாளர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு செய்தி சேகரிக்கும்போது, அங்கிருந்த மஹூவா மொய்த்ரா, "இரண்டு பைசாவுக்கு மதிப்பில்லாத பத்திரிகையாளர்களை யார் இங்கு அழைத்தது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் டிவியில் முகத்தை காட்ட ஆசைப்பட்டு இவர்களைப் போன்றவர்களை அழைக்கிறீர்கள். உடனே அவர்களை வெளியேற்றுங்கள்" எனப் பேசுகிறார்.

இந்த வீடியோ வெளியாகிய நிலையில் மொய்த்ராவுக்கு கண்டனங்கள் வலுத்துள்ளன. பத்திரிகையாளர் அமைப்புகளும் மொய்த்ராவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. சில பெங்காலி சேனல்கள், மொய்த்ரா மன்னிப்பு கேட்கும் வரை அவரின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப் போவதில்லை என்று அறிவித்துள்ளன.

பிரஸ் கிளப் - கொல்கத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "மொய்த்ராவின் பேச்சு சந்தேகத்திற்கு இடமின்றி தேவையற்றதும் அவமானகரமானதுமாகும். ஒரு ஜனநாயகத்தில் ஒரு பத்திரிகையாளரின் முக்கியத்துவம் மற்றும் அவர்களின் தொழிலுக்கு கிடைக்கும் மரியாதை உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு பத்திரிகையாளர் தனது தொழில், சமூக பொறுப்புக்காக போராடும் போராட்டம் அனைவருக்கும் தெரியும். ஒரு ஊடக நபரை அவமதிக்க யாருக்கும் உரிமை இல்லை. எம்.பி.யின் கருத்தை நாங்கள் கண்டிக்கிறோம். அவர் உடனடியாக மன்னிப்புக் கேட்டு, தான் சொன்னதைத் திரும்பப் பெறுவார் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தது.

இப்படி சர்ச்சை, கண்டனம் அதிகமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைமையோ, மொய்த்ரா பேசியது அவரின் சொந்தக் கருத்து, கட்சிக்கு பொறுப்பல்ல என்று கூறியுள்ளது.

கண்டனங்கள் அதிகமான நிலையில், மொய்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் போடுவதுபோல், இரண்டு பைசா புகைப்படத்துக்கு அருகில், "நான் சொன்ன புண்படுத்தும் விஷயங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்றதுடன், எனது மீம் எடிட்டிங் திறன் மேம்பட்டு வருகிறது என்று கிண்டலடிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com