அடுத்தடுத்து கிளம்பும் வங்கி மோசடிகள் ; விதிகளை பயன்படுத்தி திருடும் தொழிலதிபர்கள்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்ததாக நிரவ் மோடி மீதுபுகார் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தினமும் ஏதாவது ஒரு வங்கியில் யாரோ ஒருவர் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார்களும் ,வழக்குகளும் பதிவு செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது ஓரியண்டல் வங்கி.
டெல்லியை சேர்ந்த வைர வியாபார நிறுவனம் ஒன்று ஓரியண்டல் வங்கியில் “Letter for Credit” என்று சொல்லப்படுகிற , ஒரு வங்கியின் கடிதத்தை கொண்டு மற்ற வங்கியில் பணம் பெற்றுத் தங்கம், வைரம் வாங்கிக் கொள்ளும் வசதியை அளிக்கும் கடிதத்தை பெற்றிருக்கிறது. அந்தக் கடிதத்தை பயன்படுத்தி மற்ற வங்கிகளில் 2007-12 வரையான காலத்தில் சுமார் ரூ.389 கோடி அளவுக்கு கடன் பெற்றிருக்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக பெற்ற கடனுக்கான எந்த விதமான தொகையும் செலுத்தப்படவில்லை என்பதை வங்கி கண்டறிகிறது. இதனை அடுத்து 6 மாதங்களுக்கு முன்பு சி.பி.ஐயில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் அடிப்படையில் தற்போது சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. வைர வியாபார நிறுவனமான துவாரகா சேத் இண்டர்நேஷனல் நிறுவனத்தில் இயக்குநர்களான சபியா சேத், ரீட்டா சேத் , கிருஷ்ண குமார் சிங், ரவி சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என சி.பி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.