குஜராத்தில் ஸ்மிருதி, இமாச்சலில் அனுராக்?: முதல்வர் பதவிக்கு கடும் போட்டி
பாஜக வெற்றி பெற்றுள்ள குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் முதலமைச்சர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது.
182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் 99 தொகுதிகளை கைப்பற்றி பாஜக 6-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 தொகுதிகளில் பாஜக 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இரு மாநிலங்களிலும், முதல்வரை தேர்வு செய்யும் பணிக்கு கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சரோஜ் பாண்டே ஆகியோர் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தின் முதலமைச்சரை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் நரேந்திரசிங் தோமர் ஆகியோர் தேர்வு செய்கின்றனர்.
இதனிடையே இரு மாநிலங்களிலும், முதலமைச்சர் பதவிக்காக கட்சியின் முன்னணியினர் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. குஜராத் முதல்வராக விஜய் ரூபானி விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணியும் முதல்வர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல், இமாச்சலில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் தோல்வியை தழுவிய நிலையில், அங்கு மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, அனுராக் தாக்கூர் ஆகியோர் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.